கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி குழப்பத்திற்கு பா.ஜனதா தான் நேரடி காரணம் - ஜனதா தளம்(எஸ்)

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி குழப்பத்திற்கு பா.ஜனதா தான் நேரடி காரணம் என்று ஜனதா தளம்(எஸ்) குற்றம்சாட்டியது.
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி குழப்பத்திற்கு பா.ஜனதா தான் நேரடி காரணம் - ஜனதா தளம்(எஸ்)
Published on

பெங்களூரு,

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் எச்.விஸ்வநாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் எங்கள் கட்சியில் இருந்து எந்த தவறும் எழவில்லை. காங்கிரஸ் கட்சியில் சில எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ள கருத்துகள் அவர்களது சொந்த கருத்துகள் ஆகும். எங்கள் கட்சியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ள குழப்பத்துக்கு கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் தீர்வு காண்பார்கள். குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நலனுக்காக பா.ஜனதாவினர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்கள் செயல்படுகிறார்கள். மக்களின் நலன் அவர்களுக்கு முக்கியம் இல்லை. குடகு மாவட்ட மக்களுக்கு மறுவாழ்வு வசதிகள் செய்து கொடுக்க, பிரதமரை கர்நாடக பா.ஜனதாவினர் சந்தித்து சிறப்பு நிதி உதவியை பெற்றுத்தர முயற்சி செய்ய வேண்டும்.

கர்நாடகத்தில் பா.ஜனதாவினர் மிக மோசமான, தவறான அரசியலை நடத்துகிறார்கள். ஆட்சி அதிகாரத்தை பிடிக்க எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பா.ஜனதாவினர் ஈடுபட்டுள்ளனர். கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்யும். இந்த கூட்டணி ஆட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு பா.ஜனதாதான் நேரடி காரணம் ஆகும்.

முதல்-மந்திரி குமாரசாமி, விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். பெட்ரோல்-டீசல் விலையை குறைத்துள்ளார். மக்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் முதல்-மந்திரி குமாரசாமி செயல்படுகிறார்.

இவ்வாறு எச்.விஸ்வநாத் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com