பா.ஜனதாவினர் பயங்கரவாதிகள் இல்லை எடியூரப்பா பேச்சு

பா.ஜனதாவினர் பயங்கரவாதிகள் இல்லை என்று எடியூரப்பா கூறினார்.
பா.ஜனதாவினர் பயங்கரவாதிகள் இல்லை எடியூரப்பா பேச்சு
Published on

துமகூரு,

கர்நாடக பா.ஜனதா சார்பில் பரிவர்த்தனா யாத்திரை பொதுக்கூட்டம் துமகூரு மாவட்டம் பாவகடாவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா கலந்து கொண்டு பேசியதாவது:-

மிக சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடியை விமர்சிக்கும் அளவுக்கு சித்தராமையா இன்னும் வளரவில்லை. மத்திய அரசு வழங்கிய நிதியை வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், தனது சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு செலவழிக்கிறார். மத்திய அரசின் நிதியில் அவர் ஆடம்பர தர்பார் நடத்துகிறார்.

காங்கிரஸ் அரசு கமிஷன் ஏஜெண்டை போல் செயல் படுகிறது. நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் இந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவேன். கர்நாடகத்திற்கு மாற்றத்திற்கான காலம் வந்துள்ளது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. எனது பெயரில் ராமன் உள்ளார் என்று சித்தராமையா சொல்கிறார். ஆனால் அவர் உடுப்பிக்கு பல முறை சென்று இருக்கிறார். அங்குள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு அவர் செல்லவில்லை. கேட்டால் என்னை யாரும் அழைக்கவில்லை என்று அவர் சொல்கிறார். அவரை யார் அழைப்பார்கள்?.

கர்நாடக மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க முடிவு செய்துவிட்டனர். இந்த பாவகடா பகுதி 70 ஆண்டுகளாக வளரவே இல்லை. இதனால் இங்கு எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். நாங்கள் இந்த பகுதியை வளர்ச்சி அடைய செய்கிறோம். பத்ரா மேல் அணை திட்டத்தை செயல்படுத்தி அனைத்து ஏரிகளையும் நிரப்புவேன்.

இந்த பகுதியில் சூதாட்டம் அதிகமாக நடக்கிறது. போலீசார் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. பா.ஜனதாவினர் பயங்கரவாதிகள் என்று சித்தராமையா கூறி இருக்கிறார். அவர் ஒரு ஆணவம் பிடித்த முதல்-மந்திரி. பா.ஜனதாவினர் ஒன்றும் பயங்கரவாதிகள் இல்லை. நாங்கள் தேசபக்தர்கள். இது மக்களுக்கு தெரியும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com