வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கன்னியாகுமரியில் படகு போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும்

வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கன்னியாகுமரியில் படகு போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும் என்று கலப்பை மக்கள் இயக்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கன்னியாகுமரியில் படகு போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும்
Published on

நாகர்கோவில்,

கொரோனா ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சில சுற்றுலா தலங்களுக்கு மட்டும் இ-பாஸ் பெற்று சுற்றுலா செல்லலாம் என அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை நம்பி கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் கடந்த 5 மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். அவர்கள் நலன் கருதி கன்னியாகுமரிக்கும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கலப்பை மக்கள் இயக்கம்

இந்தநிலையில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர், சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன் மற்றும் அங்குள்ள கடை வியாபாரிகள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.

அந்த மனுவில், கொரோனா காரணமாக சுற்றுலாதலங்கள் திறக்காததால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை நம்பி கடை வைத்திருக்கும் நடைபாதை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 5 மாதங்களாக கடைகளுக்கு வாடகை கொடுக்க முடியாமலும், பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் மின் கட்டணம் செலுத்த முடியாமலும் தவிக்கிறார்கள். எனவே தமிழகத்தில் ஊரடங்கை தற்போது தளர்த்தி இருப்பதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதித்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். மேலும் அரசுக்கு வருமானம் தரக்கூடிய கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com