பல்லடத்தில், நள்ளிரவில் துணிகரம்: 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.5¼ லட்சம் கொள்ளை

பல்லடத்தில் நள்ளிரவில் 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.5¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பல்லடத்தில், நள்ளிரவில் துணிகரம்: 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.5¼ லட்சம் கொள்ளை
Published on

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறு கொத்தான்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 36). இவர் பல்லடம் பஸ் நிலையம் அருகே திருப்பூர் ரோடு பிரிவு சந்திப்பில் ஆட்டோ கன்சல்டிங் என்ற பெயரில் பழைய இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையையொட்டி பின்புறம் இருசக்கர வாகனங்களை நிறுத்திவைக்கும் இடம், வாகனம் பழுது பார்க்கும் இடம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

இந்த கடையில் சேடப்பட்டியை சேர்ந்த செந்தில் (42) என்பவர் மெக்கானிக்காக உள்ளார். இவர் இரவு நேரத்தில் கடையில் படுத்து தூங்குவது வழக்கம். இந்த நிலையில் கடை உரிமையாளர் கணேசன் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திருநள்ளாறு புறப்பட்டு சென்றார். செந்தில் வழக்கம்போல் கடையின் அலுவலக அறை அருகே உள்ள மற்றொரு அறையின் இரும்பு ஷட்டரை சுமார் ஒரு அடி உயரத்துக்கு உயர்த்தி வைத்துவிட்டு அதற்குள் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம ஆசாமிகள் அங்கு வந்தனர். அவர்கள் செந்தில் படுத்து இருந்த அறையின் இரும்பு ஷட்டரை முழுமையாக இறக்கி மூடிவிட்டு செந்தில் வெளியே வர முடியாதபடி அந்த கதவில் ஒரு கம்பியை வைத்துள்ளனர். சத்தம் கேட்டதும் மெக்கானிக் செந்தில் எழுந்து இரும்பு ஷட்டரை திறக்க முயன்றார். ஆனால் அவரால் திறக்க முடிவில்லை. இதனால் அவர் சத்தம் கொடுத்தார். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை.
இதற்கிடையில் மர்ம ஆசாமிகள் கணேசனின் கடையின் அலுவலக பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மேஜைக்குள் இருந்த ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் அருகில் இருசக்கர வாகனங்கள் நிறுத்திவைக்கப்படும் பகுதியில் இருந்த ஒரு மேஜையையும் உடைத்து திறந்து அதில் இருந்த ரூ.20 ஆயிரத்தையும் அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை பதிவு செய்யும் கணினி கருவிகளையும் துண்டித்து அவற்றை எடுத்துச்சென்றுவிட்டனர்.

அதன் அருகில் வெள்ளகோவில் எல்.கே.நகரை சேர்ந்த என்.சுப்பிரமணியம் (50) என்பவர் பங்குதாரர்களுடன் இணைந்து மற்றொரு பழைய இருசக்கர வாகன விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார். மர்ம ஆசாமிகள் இந்த கடையின் பூட்டை உடைத்தும் உள்ளே புகுந்து மேஜைக்குள் இருந்த சுமார் ரூ.7 ஆயிரத்தை எடுத்துச்சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் அந்த வழியாக சென்றவர்கள் சத்தம் கேட்டு வந்து மெக்கானிக் செந்தில் இருந்த கடையின் இரும்பு ஷட்டரை திறந்துவிட்டனர். அதைத்தொடர்ந்து அவர் இது குறித்து பல்லடம் போலீசாருக்கும் கடை உரிமையாளர் கணேசனுக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பல்லடம் துணைபோலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி, குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி, சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

இது தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்கள். பல்லடத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து மெக்கானிக் செந்தில் கூறியதாவது:-
எனது சொந்த ஊர் சேடப்பட்டி ஆகும். நான் இங்கு கடந்த 10 மாதங்களாக பணியாற்றி வருகிறேன். இரவு நேரத்தில் கடையில் படுத்து தூங்குவேன். அருகில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை பார்க்கும் மணப்பாறையை சேர்ந்த கண்ணன் (35) என்பவர் அவ்வப்போது வந்து என்னுடன் படுத்துக்கொள்வது உண்டு. ஆனால் அவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஊருக்கு சென்றுவிட்டார். இதனால் நான்மட்டும் கடையில் தூங்கிக்கொண்டிருந்தேன்.

நள்ளிரவு 1 மணி அளவில் ஏதோ சத்தம் கேட்டு எழுந்துபார்த்தேன். அப்போது நான் இருந்த அறையின் இரும்பு ஷட்டர் மூடப்பட்டு இருந்தது. எவ்வளவு முயன்றும் திறக்க முடியவில்லை. இந்த நிலையில் காலை 6 மணி அளவில் அந்த வழியாக சென்றவர்கள் வந்து திறந்துவிட்டதால் வெளியே வந்து பார்த்தேன். அப்போதுதான் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கும், கடை உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

நாய்கள் இல்லாததால் கைவரிசை

கொள்ளை சம்பவம் நடந்த இருசக்கர வாகன விற்பனை கடையில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்த போது எடுத்தபடம்.
பல்லடம்-திருப்பூர் ரோடு சந்திப்பு போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். இங்கு பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடை நடத்திவந்த கணேசன் 3 நாய்களை வளர்த்து வந்துள்ளார்.

இரவு நேரத்தில் கடை பகுதியில் அந்த நாய்களை விட்டிருப்பார். ஆனால் கடந்த 1 மாதங்களுக்கு முன்புதான் கணேசன் தனது தோட்டத்துக்கு அந்த நாய்களை கொண்டு சென்று விட்டிருந்தார்.

சம்பவத்தன்று நாய்கள் இல்லாததால் மர்ம ஆசாமிகள் வந்தது யாருக்கும் தெரியவில்லை. இல்லையென்றால் நாய்கள் குரைக்கும் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்திருப்பார்கள். அதன் மூலம் அசம்பாவித சம்பவங்கள் நடப்பது தடுக்கப்பட்டிருக்கும். நாய்கள் இல்லாததை தெரிந்தே அந்த மர்ம ஆசாமிகள் வந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com