கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே: மேம்பாலம் கட்டித்தரக்கோரி லாரிகளை சிறைபிடித்து - பொதுமக்கள் போராட்டம்

வெங்கல் அருகே சாலையை சீரமைக்க கோரியும், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டக்கோரியும் திருக்கண்டலம் கிராம பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே: மேம்பாலம் கட்டித்தரக்கோரி லாரிகளை சிறைபிடித்து - பொதுமக்கள் போராட்டம்
Published on

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், திருக்கண்டலம் ஊராட்சியில் பூச்சி அத்திப்பட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை 20 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்டதாகும். இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இந்த சாலை பொதுமக்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளதாக தெரிகிறது. மேலும் அங்குள்ள கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் இல்லாததாலும் கிராம மக்கள் சிரமமடைந்து பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கொசஸ்தலை ஆற்றின் ஓரமாக அமைந்துள்ள திருக்கண்டலம், அண்ணாநகர், பூச்சி அத்திப்பட்டு ஆகிய இப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட செங்கல் தொழிற்சாலைகள் உள்ளது. சரக்குகளை பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றிஅனுப்பி வைக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகிறது. இதனால் நாள்தோறும் 100-க்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.

இதனால் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிராம சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத அளவு மாறியுள்ளது. இந்த சாலையை சீரமைத்து தரக்கோரியும், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட கோரிக்கை விடுத்தும் திருக்கண்டலம் கிராம பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், நட வடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் திருக் கண்டலம் பூச்சி அத்திப்பட்டு சாலை வழியாக வந்த லாரிகளை நேற்று திடீரென்று சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் கூறினர். இதனை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com