

ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் குஹுண்சூர் பகுதிக்கு கர்நாடக அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதேபோல் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு மர பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ஆசனூர் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்த மரங்கள் சரிந்து திடீரென அரசு பஸ் மீது சாய்ந்தது. இதனால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கி சேதமடைந்தது. விபத்து நடந்தபோது பஸ்சில் இருந்த பயணிகள் `அய்யோ அம்மா` என கூச்சலிட்டனர். ஆனால் பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீராகியது. அனைத்து வாகனங்களும் அங்கிருந்து சென்றன. இதனால் ஆசனூர் அருகே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.