பாலியல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை: சரண் அடைந்த வாலிபரை காவலில் எடுத்து விசாரணை

புதுக்கடை அருகே பாலியல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் சரண் அடைந்த வாலிபரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
பாலியல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை: சரண் அடைந்த வாலிபரை காவலில் எடுத்து விசாரணை
Published on

புதுக்கடை,
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த உறவுக்கார இளம்பெண்ணுக்கு ராஜேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் ராஜேஷ் தலைமறைவானார். அவரை கைது செய்யும் வரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் இருந்த இளம்பெண்ணின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ராஜேஷ் கடந்த 23-ந் தேதி குழித்துறை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இதனையடுத்து இளம்பெண்ணின் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை அதிகாரியான நித்திரவிளை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மா தலைமையிலான போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ராஜேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

தற்கொலை செய்த இளம்பெண் எனக்கு உறவு முறையில் தங்கையாவார். சம்பவத்தன்று அவரது வீட்டில் இருந்த டி.வி. பழுதடைந்தது. அதை சரி செய்ய அவர் என்னை வீட்டுக்கு அழைத்தார். அப்போது அவருக்கு நான் பாலியல் தொல்லை கொடுத்தேன். இதனால் அவர் சத்தம் போட்டார். உடனே, நான் தப்பி ஓடிவிட்டேன்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்ற போது, அவர் தீக்குளித்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை பார்த்ததும் நான் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டேன். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

அதன்பின்பு, ராஜேஷ் நாகர்கோவிலில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com