அகலப்படுத்தும் பணியால் ஊட்டி-குன்னூர் சாலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் - வாகன ஓட்டிகள் பீதி

அகலப்படுத்தும் பணியால் ஊட்டி-குன்னூர் சாலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.
அகலப்படுத்தும் பணியால் ஊட்டி-குன்னூர் சாலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் - வாகன ஓட்டிகள் பீதி
Published on

ஊட்டி,

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து கூடலூர், ஊட்டி, குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். சமவெளி பகுதிகளில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சீசன் காலங்களில் சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கிறது. மேலும் சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல காலதாமதம் ஆகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. ஊட்டி-குன்னூர் சாலை சத்துணவு மையத்தில் இருந்து தலையாட்டுமந்து, லவ்டேல் சந்திப்பு, வேலிவியூ வரை ரூ.25 கோடி செலவில் விரிவாக்க பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகின்றது.

சாலையில் மழைநீர் தேங்காத வகையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. விரிவாக்க பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் சாலையின் இருபுறமும் உள்ள மலைகுன்று பகுதியில் மண் அகற்றப்பட்டது. அப்போது மலைகுன்றில் இருந்த பாறைகள் சாலையில் விழுந்தன. பின்னர் கம்பரசர் மூலம் பாறைகள் துளை போட்டு உடைக்கப்பட்டன. அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. அப்போது ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது.

மண் அடிக்கடி இடிந்து கீழே விழுந்து கொண்டு இருந்ததால், தடுப்புச்சுவர் கட்ட முடியவில்லை. அதன் காரணமாக அந்த பணிகள் நிறுத்தப்பட்டன. ஊட்டி-குன்னூர் சாலை நொண்டிமேடு பகுதியில் தற்போது மண் அகற்றப்பட்ட மலைகுன்று பகுதி அபாயகரமான நிலையில் காட்சி அளிக்கிறது. எப்போது வேண்டுமானாலும் மண்சரிவு ஏற்படலாம் என்ற நிலை காணப்படுகிறது. ஊட்டியில் பலத்த மழை பெய்தால் மேல்பகுதியில் இருந்து மண் சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை உள்ளது. மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள அப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

ஊட்டி-குன்னூர் சாலையில் இருந்து அந்த பகுதிக்கு நடைபாதை செல்கிறது. பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து வந்து பஸ்சில் ஏறி பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். கூலி வேலைக்கு செல்கிறவர்களுக்கும் நடைபாதையை பயன்படுத்துகின்றனர்.

இதுதவிர பகல் மற்றும் இரவில் வாகனங்கள் வந்து சென்று கொண்டே இருக்கும். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அபாயகரமான பகுதியை கடந்து செல்லும்போது பீதியடைகின்றனர். எனவே, அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கவும், ஊட்டி-குன்னூர் சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்ற பகுதிகளில் மண் சரிவு ஏற்படாமல் இருக்க உயரமாக தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com