

கண்டாச்சிமங்கலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரை குடித்த அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 65), கோவிந்தராசு, சசிகலா உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் வாந்தி-மயக்கத்தால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து கண்ணனின் உடல் சொந்தஊருக்கு கொண்டு வரப்பட்டது. சுகாதாரமற்ற குடிநீரால் தான் கண்ணன் இறந்துள்ளார். எனவே இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்ணனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திம்மலையில் உள்ள கிராமசேவை மய கட்டித்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த கலெக்டர் கிரண்குராலா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள், சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் தான் கண்ணன் இறந்துள்ளார். எனவே எங்கள் பகுதிக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கவேண்டும்.
மேலும் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும், மேலும் முறையாக பணி செய்யாத ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
அதனை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் கிரண்குராலா கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து 20 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி மற்றும் ஆழ்துளை கிணறு அமைந்துள்ள பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளிடம், பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கவேண்டும், புதியதாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அப்போது மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் ரெத்தினமாலா, சுகாதார பணிகள் இணை இயக்குனர் சதீஷ் குமார், தாசில்தார் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வேல்முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி உள்பட பலர் உடன் இருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.