குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுமா

கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா? என்பதற்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா
கொரோனா
Published on

கோவை,

கோவை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிப்பதற்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு பின் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் சிலருக்கு சிகிச்சையும், ஆலோசனையும் அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பாதித்து குணமானவர்களுக்கு மீண்டும் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு போன்ற கொரோனா அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கொரோனா மீண்டும் பாதித்து விட்டதோ என்ற அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா? என்பது குறித்து கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்கி குணமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை அளிப்பதற்காக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தனி மையம் (போஸ்டு கோவிட் சென்டர்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வருபவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் உள்ளன.

ஆனால் அந்த தொந்தரவுகள் சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும். அதன் பின் சரியாகி விடும். இதனால் அவர்களுக்கு கொரோனா மீண்டும் வந்து விட்டதோ என்று பயப்பட வேண்டியதில்லை. இருந்தபோதிலும் அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து அனுப்புகிறோம்.

உதாரணத்துக்கு நிமோனியா, டைபாய்டு போன்ற நோய்கள் வந்து குணமான பின்னரும் உடல் சோர்வு, காய்ச்சல் போன்ற தாக்கம் இருக்கும். அதுபோலத் தான் கொரோனா பாதிப்பு வந்தவர்களுக்கும் அதன் தாக்கம் சில நாட்கள் வரை இருக்கும்.

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அவர்களில் ஒரு சதவீதம் பேர் கூட தொடர் சிகிச்சைக்கு வருவதில்லை. ஆனால் தற்போது தினமும் 5 முதல் 10 பேர் வரை தனி மையத்துக்கு வருகிறார்கள்.

அவர்களில் சந்தேகத்துக்குரியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் அவர்களுக்கு உடல் சோர்வு, காயச்சல், தொண்டை வலி போன்ற தொந்தரவுகள் இருக்கிறது.

அவற்றுக்கு மருந்து கொடுத்தால் குணமாகி விடும். எனவே கொரோனா பாதித்து குணமானவர்களை மீண்டும் கொரோனா தாக்கு வதற்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com