குடிமராமத்து திட்டத்தில் பலப்படுத்தப்படும் கண்மாய் கரைகள்

மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் கரைகள் பலப் படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
குடிமராமத்து திட்டத்தில் பலப்படுத்தப்படும் கண்மாய் கரைகள்
Published on

ராமநாதபுரம்,

வெண்ணத்தூர் மற்றும் சம்பை ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தினை மேம்படுத்தும் நோக்கில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37 கோடியே 59 லட்சம் மதிப்பில் 69 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பரமக்குடி கீழ்வைகை வடிநில கோட்டம் கட்டுப்பாட்டின் கீழுள்ள 41 கண்மாய்களிலும், மதுரை குண்டாறு வடிநில கோட்டம் கட்டுப்பாட்டின் கீழுள்ள 28 கண்மாய்களிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணிகளை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட கண்மாய்களின் ஆயக்கட்டுதாரர்களை ஒருங்கிணைத்து வெளிப்படையாக விவசாய பாசனதாரர் சங்கம் நிர்வாக குழு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் 90 சதவீதம் அரசின் பங்களிப்பு தொகையுடனும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர் நல சங்கத்தின் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 69 கண்மாய்களில் 211.47 கிலோ மீட்டர் நீளத்திற்கு கரைகள் பலப்படுத்துதல், வரத்துக்கால்வாய் புனரமைத்தல், உபரி நீர் வடிகால் புனரமைத்தல், 112 மடைகள் மராமத்து செய்தல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், கண்மாயினை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை மேற்கொள்ளும் விவசாய நலச்சங்க பிரதிநிதிகளுக்கு குடிமராமத்து திட்ட பணிகள் குறித்து உரிய பயிற்சி அளிக்கப்பட்டது.

குடிமராமத்து திட்டத்தின்கீழ் வெண்ணத்தூர் கண்மாயில் ரூ.99 லட்சம் மதிப்பிலும், சம்பை கண்மாயில் ரூ.39 லட்சம் மதிப்பிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிமராமத்து மேற்கொள்ளும் அனைத்து கண்மாய்களிலும், வருவாய்த்துறை அலுவலர்கள் நில அளவீடு செய்து கண்மாயின் எல்லையை குறியீடு செய்யவும், ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அலுவலர்களோடு ஒருங்கிணைந்து பாரபட்சமின்றி அகற்றவும், சீமைக்கருவேல மரங்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குடிமராமத்து பணியை சிறப்பாக செயல்படுத்தி ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் முதல் 3 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் மற்றும் 3-ம் பரிசாக தலா ரூ.5 லட்சமும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவராமகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் பிரபு, ஆனந்த்பாபுஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, தாசில்தார் தமிழ்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com