

நாகப்பட்டினம்,
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மருந்து, பால் கடைகள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டு சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டு வந்தது. இந்தநிலையில் செப்டம்பர் மாதம் முதல் ஊரடகில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி முதல் கட்டமாக மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. வழிபாட்டு தலங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பன்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையில் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் நாகை மாவட்டத்தில் பொருட்கள் வாங்க குறைந்த அளவிலான பொதுமக்களே வந்தனர். இதேபோல் நாகை கடைவீதியிலும், இறைச்சி கடைகளிலும், மீன் சந்தைகளிலும் குறைந்த அளவிலான பொதுமக்களே காணப்பட்டனர்.
இதேபோல் மயிலாடுதுறையில் மீன், ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆனாலும் இறைச்சி வாங்க குறைந்த அளவிலான மக்களே வந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுவாகவே பிற கடைகள் அதிக அளவில் திறக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை சாரல் மழை பெய்துகொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் மயிலாடுதுறை நகரில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
சீர்காழி பகுதியில் உள்ள பெரும்பான்மையான கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. மேலும் மீன் கடைகள், கோழி கடைகள் உள்ளிட்ட இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. சீர்காழியில் இருந்து கொள்ளிடம், மயிலாடுதுறை, பழையாறு, திருமுல்லைவாசல், பொறையாறு உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகள் நடமாட்டம் இல்லாததால் குறைவான பயணிகளோடு பஸ்கள் இயக்கப்பட்டன. சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் பெரும்பான்மையான கடைகள் திறக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.