செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் போட்டி போட்டு மனுதாக்கல்

பவுர்ணமி தினத்தையொட்டி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் போட்டி போட்டு மனுதாக்கல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் போட்டி போட்டு மனுதாக்கல்
Published on

சலசலப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந்தேதி 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. நாளை 22-ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் நேற்று பவுர்ணமி தினம் என்பதால் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் வேன், கார் மூலம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர்.மனு தாக்கல் செய்யும் வேட்பாளருடன் 2 நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதி என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் வேட்பாளரின் ஆதரவாளர்கள் காட்டாங்கொளத்தூர் அலுவலகம் முன்பு தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீசாருக்கும் வேட்பாளர் ஆதரவாளர்களுக்கும் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

போட்டி போட்டு மனுதாக்கல்

இதனை தொடர்ந்து அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் பவுர்ணமி என்பதால் போட்டி போட்டு கொண்டு தங்களது வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்தனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திருப்போரூர்

திருப்போரூர் ஒன்றியத்தில் 50 ஊராட்சி மன்ற தலைவர், 22 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் வினியோகம் மற்றும் தாக்கல் கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கியது.இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை பெற வந்தனர். அவர்களுடன் வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இருந்தனர். இதனால், திருப்போரூர் பஸ் நிலையம், ரவுண்டானா, தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஓ.எம்.ஆர். சாலை உள்பட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகனங்கள் 2 கி.மீ. தூரத்துக்கு வரிசை கட்டி நின்றன. 2-வது நாளான நேற்று திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்துக்கு வேட்பாளர்களுடன் ஏராளமானோர் திரண்டு வந்ததால் அந்த பகுதியே திணறியது. இதனால், திருப்போரூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் சிக்கின. இதையடுத்து திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணையன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com