கதக் அருகே கார்கள் நேருக்குநேர் மோதல் 6 வாலிபர்கள் உடல் நசுங்கி சாவு திருமணத்திற்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

கதக் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 வாலிபர்கள் உடல் நசுங்கி பலியானார்கள். திருமணத்திற்கு சென்று திரும்பியவர்களுக்கு இந்த பரிதாபம் நடந்துள்ளது.
கதக் அருகே கார்கள் நேருக்குநேர் மோதல் 6 வாலிபர்கள் உடல் நசுங்கி சாவு திருமணத்திற்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

கதக்,

கதக் (மாவட்டம்) புறநகர் அடவிசோமபுரா கிராமம் அருகே கதக்-முண்டர்கி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இருந்த இரும்பால் ஆன தடுப்பு வேலியை இடித்து தள்ளிவிட்டு எதிர் ரோட்டிற்கு கார் சென்றது. அப்போது எதிர் ரோட்டில் வந்த மற்றொரு கார் மீது அந்த கார் நேருக்குநேராக மோதியது. இதில், 2 கார்களின் முன்பகுதியும் அப்பளம் போல நொறுங்கி சேதம் அடைந்தது.

இந்த கோர விபத்தில் தறிகெட்டு ஓடிய காரில் இருந்த டிரைவர் உள்பட 6 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். மற்றொரு காரில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி அறிந்ததும் கதக் புறநகர் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேரின் உயிருக்கும் ஆபத்து ஏதும் இல்லை என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் தார்வார் மாவட்டம் ஆகசி கிராமத்தை சேர்ந்த அருண்குமார்(வயது 28), சித்தலிங்கேஷ்(30), மனோஜ்குமார்(28), சென்னப்பா(28), அம்ருத்(26) மற்றும் ஆனந்த்(28) என்று தெரியவந்தது. இவர்கள் அனைவரும் கதக் மாவட்டத்தில் நடந்த தங்களது நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு காரில் தார்வாருக்கு திரும்பியபோது விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது.

மேலும் விபத்தை ஏற்படுத்திய காரை, டிரைவர் அதிவேகமாக ஓட்டியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதும், மற்றொரு கார் மீது மாதியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கதக் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணத்திற்கு வந்து திரும்பிய 6 வாலிபர்கள் விபத்தில் பலியான சம்பவம் கதக்கில் நேற்று சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com