

திருச்சி,
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, காவிரியை காப்போம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கியது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கரூர் மாவட்டம் நொய்யல், வேலாயுதம்பாளையம், குளித்தலை வழியாக நேற்று இரவு திருச்சி வந்தனர். இதில் அக்கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மோட்டார் சைக் கிளிலும், காரிலும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து திருச்சி சின்னக்கடை வீதியில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். துணை தலைவர் உமாநாத், மாநகர் மாவட்ட செயலாளர் திலீப்குமார் பேசினர். மாநில தலைவர் ஜி.கே.மணி, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
காவிரி தாயை பாதுகாக்க பிரசாரம் தொடங்கி உள்ளோம். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. விவசாயிகளுக்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. திருச்சி முக்கொம்பு பகுதியில் காவிரி ஆற்றில் 40 அடி உயரத்திற்கு அணை கட்ட வேண்டும். திருச்சியில் இருந்து கரூர் வரை 80 கிலோ மீட்டர் தொலைவுக்கு காவிரி ஆற்றின் இரண்டு கரைகளிலும் 30 அடி உயரத்திற்கு கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும்.
நெல் குவிண்டாலுக்கு ரூ.2,350, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் 20 நீர் பாசன திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இந்த திட்டங்களை நிறைவேற்ற வெறும் ரூ.50 கோடி தான் செலவு ஆகும். பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்து இருந்தால், திருச்சியை 2-வது தலைமையிடமாக மாற்றி இருப்போம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மேலும் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முசிறி, ஸ்ரீரங்கத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.