காவிரி குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்

பெரம்பலூர் நகருக்கு குடிநீர் வழங்கும் ரூ.85 கோடி மதிப்பிலான காவிரி குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வணிகர் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
காவிரி குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்
Published on

பெரம்பலூர்,

அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பான பெரம்பலூர் மாவட்ட வணிகர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் தனியார் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்யா நடராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பெரம்பலூரில் மே.5-ந்தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு சங்க மாநாட்டை சிறப்பாக நடத்துவது. பெரம்பலூர் நகருக்கு தற்போது நகராட்சி நிர்வாகம் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே காவிரி குடிநீர் வழங்கி வருகிறது. தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவதற்காக அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் இருந்து பெரம்பலூர் நகருக்கு மட்டும் பிரத்யேகமாக குடிநீர் வழங்கும் ரூ.85 கோடி மதிப்பிலான காவிரி குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

பெரம்பலூரில் ரோவர் நூற்றாண்டு வளைவு அருகே சிக்னலை திறந்து வைத்து போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வரும் மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது. பெரம்பலூர், துறைமங்கலம் நான்குரோடு மற்றும் பெரம்பலூர் சுற்றுப்புற கிராமங்களில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால், திருட்டு குற்றங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் கூடுதலாக கிராமிய போலீஸ் நிலையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். பெரம்பலூரில் வணிகர்களின் நலனுக்காக மத்திய ஜி.எஸ்.டி. வரி அலுவலகத்தையும், மாவட்ட பதிவு அலுவலகத்தையும் பெரம்பலூரில் உடனே திறக்க வேண்டும்.

பெரம்பலூரில் வடக்கு மாதவி சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதால், வடக்குமாதவி சாலையை ஒருவழிசாலையாக உருவாக்கி உழவர் சந்தை மைதானத்தின் வடக்கு பகுதியில் தார்ச்சாலை அமைத்து எளம்பலூர்-வடக்குமாதவி சாலைகளை இணைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் நல்லதம்பி, துணை பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் விநாயகா ரவிச்சந்திரன் மற்றும் வணிகர் நல சங்க ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com