செல்போன் கோபுரத்தில் ஏறி தினகரன் ஆதரவாளர் தற்கொலை மிரட்டல்

ராஜா அண்ணாமலைபுரத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி தினகரன் ஆதரவாளர் தற்கொலை மிரட்டல், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
செல்போன் கோபுரத்தில் ஏறி தினகரன் ஆதரவாளர் தற்கொலை மிரட்டல்
Published on

அடையாறு,

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவேண்டும். ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி ராஜா அண்ணாமலைபுரத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஆர்.கே.மடம் சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. நேற்று காலை இந்த செல்போன் கோபுரத்தில் வாலிபர் ஒருவர் ஏறினார். அவருடைய கையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடி இருந்தது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அங்கு கூடிவிட்டனர். அந்த வாலிபரை செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கிவரும்படி அவர்கள் குரல் கொடுத்தனர். ஆனால் அதை கண்டுகொள்ளாத வாலிபர், செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிச்சென்றார். அங்கு கையில் இருந்த கட்சி கொடியை அசைத்து கோஷமிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மயிலாப்பூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வரும்படி அந்த வாலிபரை அவர்கள் வலியுறுத்தினர்.

அதற்கு அந்த வாலிபர், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை விரைவில் வெளியிட வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும். எனது இந்த 2 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தால்தான் கீழே இறங்குவேன். இல்லை இங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.

சம்பவ இடத்துக்கு அபிராமபுரம் போலீசாரும் விரைந்து வந்தனர். இதையடுத்து போலீசாரும், அங்கு கூடியிருந்தவர்களும் செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை சமாதானப்படுத்தினர். ஆனாலும் அவர் இறங்க மறுத்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் 4 பேர் செல்போன் கோபுரத்தில் ஏறி, வாலிபருடன் சமாதானம் பேசினர். சுமார் 45 நிமிட போராட்டத்துக்கு பிறகு சமாதானம் அடைந்த அவரை, செல்போன் கோபுரத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக கீழே இறக்கி கொண்டு வந்து அபிராமபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவருடைய மகனான ராக்கி என்ற ராஜேஷ் (வயது 26) என்பதும், தண்ணீர் கேன்கள் வினியோகிக்கும் வேலை செய்து வருவதும் தெரிந்தது.

மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை சேர்ந்த அவர், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர் என்பதும் தெரியவந்தது.

இதுபற்றி ராஜேஷ் கூறும்போது, 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு தாமதமாகிக்கொண்டே போகிறது. அதனால்தான் அ.தி.மு.க. அரசு நீடிக்கிறது. தீர்ப்பு வந்துவிட்டால் தமிழக அரசியலில் திருப்பம் வரும். எனவேதான் இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தேன் என்றார்.

இதையடுத்து அவரை போலீசார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதற்கு யாராவது தூண்டுதலாக இருந்தார்களா? என்பது குறித்தும் ராஜேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறி நின்றும் இதேபோல் ராஜேஷ் தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com