சுவாமிமலையில் தயார் செய்யப்படும் உலோக சிலைகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் தயார் செய்யப்படும் உலோக சிலைகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவுசார் சொத்துரிமை வக்கீல்கள் சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார்.
சுவாமிமலையில் தயார் செய்யப்படும் உலோக சிலைகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு
Published on

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அறிவுசார் சொத்துரிமை வக்கீல்கள் சங்க தலைவரும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான சஞ்சய்காந்தி நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

புவிசார் சட்டம் தொடர்பாக பல்வேறு சட்ட விதிமுறைகள், வரலாற்று ஆவணங்களை மத்திய அரசின் புவிசார் குறியீடு பதிவகத்தில் சமர்ப்பித்துள்ளேன். இதேபோல சுவாமிமலையில் தயார் செய்யப்படும் உலோக சிலைகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற முயற்சி செய்யப்பட்டது.

தொடர் முயற்சியின் காரணமாக மத்திய அரசின் தொழில் துறை வர்த்தக அமைச்சகத்தின் பதிவாளர் ஓ.பி.குப்தா, சுவாமிமலையில் தயார் செய்யப்படும் உலோக சிலைகளுக்கு புவிசார் குறியீடுக்கான தனி முத்திரை அடையாளத்திற்குரிய அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை வழங்கியுள்ளார்.

இதன் மூலம் சுவாமிமலையில் உள்ள உலோக சிலை தயாரிப்பாளர்கள் மட்டும்தான் சுவாமிமலை உலோக சிலை என்று தங்களது தயாரிப்புகளில் பயன்படுத்த முடியும். இந்த பெயரை தவறாக பயன்படுத்தி போலியான சிலைகளை தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். குடிசை தொழிலாக செய்யப்படும் சிலை செய்யும் தொழிலில் சுவாமிமலையில் 200 குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாய், திருவையாறு அசோகா அல்வா, தூத்துக்குடி மக்ரூன், திருபுவனம் பட்டு, மணப்பாறை முறுக்கு போன்றவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

மகாபலிபுரத்தில் பல்லவர் காலம் முதல் தொன்றுதொட்டு நடந்து வரும் கருங்கற் சிற்பங்களுக்கும், நாகை மாவட்டம் கொள்ளிடம் தைக்கால் பிரம்பு பொருட்களுக்கும் விரைவில் புவிசார் குறியீடு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com