தொடர் தாலி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது

கல்லக்குடி பகுதியில் தொடர் தாலி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட கொத்தனார்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தொடர் தாலி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது
Published on

கல்லக்குடி,

திருச்சி மாவட்டம் கல்லக்குடி புதூர்உத்தமனூரை சேர்ந்த அமலதாஸ் மனைவி ரோஸ்லின்மாலா. மாற்றுத்திறனாளி. இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 2-ந் தேதி தனது மூன்று சக்கர ஸ்கூட்டரில் தச்சங்குறிச்சியில் இருந்து குமுளூர் பள்ளிக்கு வேலைக்கு சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்களிடம் தனது 5பவுன் தாலி சங்கிலியை பறிகொடுத்தார். இதே போல் பிப்ரவரி 21-ந் தேதி கல்லக்குடியை சேர்ந்த பாலசுப்ரமணியன் மனைவி தாமரைச்செல்வி தனது மொபட்டில் வயலில் வேலை செய்து கொண்டு இருந்தவர்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் போது கல்லக்குடி தாப்பாய் ரோட்டில் தனது 5பவுன் தாலி சங்கிலியை பறிகொடுத்தார். தொடர்ந்து பிப்ரவரி 28-ந் தேதி புஞ்சை சங்கேந்தியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சித்ரா தனது வயலுக்கு சென்று வரும்போது ஊரணி ஏரிக்கரை அருகே தனது 5 பவுன் தாலி சங்கிலியை பறிகொடுத்தார். மேலும் கடந்த 22-ந் தேதி பளிங்காநத்தத்தை சேர்ந்த சரவணவேல் மனைவி காமாட்சி தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்ற போது கல்லக்குடி பளிங்காநத்தம் சாலையில் ஒத்தைவீடு அருகே தனது 4 பவுன் தாலி சங்கிலியை பறிகொடுத்தார். இப்படி தொடர் தாலி சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது அந்த பகுதி பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து தொடர் தாலி சங்கிலி பறிப்பில் 3 பேர் ஈடுபட்டது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த 3 பேரையும் பிடிக்க லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு உத்தரவின் பேரில் லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராபர்ட், ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் கல்லக்குடி யைச் சேர்ந்த சின்னையன் (வயது55) ஏரிக்கரை அருகே நடந்து வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2பேர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டைப்பையில் இருந்த ரூ.1000-ஐ எடுத்து கொண்டு சென்றனர்.

அப்போது அவர் கூச்சலிட்ட போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் அவர்களை பிடிக்க விரட்டி சென்றனர். மேலும் கல்லக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மோட்டார் சைக்கிளில் அவர்களை துரத்திய போது சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் அவர்கள் தலைகுப்புற விழுந்தனர். இதில் அவர்களுக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை கல்லக்குடி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மேலஉசேன்நகரம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் மணி என்ற தமிழ்மணி(31). கொத்தனார் தொழில் செய்து வருகிறார். இன்னொருவர் அரியலூர் மாவட்டம் கோவில் எசனை அருகே உள்ள விளாகம் கிராமத்தை சேர்ந்த ராமராஜ் மகன் சுதாகர்(36). இவரும் கொத்தனார். இவர்கள் இருவரும் வேலை செய்யும் போது பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆனார்கள். இருவருக்கும் குடிபழக்கம் உண்டு. வேலை செய்து வரும் சம்பளம் இவர்கள் செலவுக்கு போதாத காரணத்தால் திருட்டு தொழில் செய்வதென முடிவெடுத்து திருமானூர் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடிவந்து கல்லக்குடி பகுதியில் தொடர் தாலி சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர்.

தமிழ்மணியின் உறவினர் பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மா பாளையத்தை சேர்ந்த தன்ராஜ் மகன் சின்னதுரை(20). இவரும் நானும் உங்களுடன் வேலைக்கு வருகிறேன் என்று கூறி கொத்தனார் வேலைக்கு சென்று உள்ளார். பின்னர் சின்னதுரையும் அவர்களுடன் சேர்ந்து தாலி சங்கிலி பறிப்பு தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மேலஉசேன்நகரம் தமிழ்மணி வீட்டில் தங்கியிருந்த சின்னதுரையை போலீசார் கைது செய்தனர்.

தொடர் தாலி சங்கிலி பறிப்பு சம்பவங்களால் கல்லக்குடி பகுதியில் திருமணமான பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர பயந்து அஞ்சினார்கள். தொடர் தாலி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட திருட்டுக்கும்பலின் தலைவன் தமிழ்மணி மீது அரியலூர், குன்னம், மருவத்தூர், கொள்ளிடம், சிறுகனூர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 3பேரையும் கல்லக்குடி போலீசார் லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 2கத்தி, 20 பவுன்நகை கைப்பற்றப்பட்டன. தொடர் தாலி சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com