சென்னை மாநகரின் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு: ‘பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்’ உடனடியாக தொடங்க பொதுமக்கள் கோரிக்கை

சென்னை மாநகரின் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி அடுத்த பேரூரில் தினமும் 400 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலைய பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.
சென்னை மாநகரின் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு: ‘பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்’ உடனடியாக தொடங்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

சென்னை,

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் வீராணம் ஏரி மற்றும் போரூர் அருகில் உள்ள கல்குவாரியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து 100 மில்லியன் லிட்டர் கடல்நீர், குடிநீராக மாற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் தென்சென்னை பகுதிகளான சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படும் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது சென்னையில் தினமும் 830 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது, ஆனால் தற்போது 550 மில்லியன் லிட்டர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது.

ஆண்டுக்கு ஆண்டு சென்னை மாநகரம் விரிவடைந்து வருவதுடன், குடியிருப்புகளின் எண்ணிக்கையும், சென்னை மாநகருக்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. இவர்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்பதால், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரூரில் புதிதாக கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, நெம்மேலி அருகே உள்ள பேரூரில் புதிதாக 400 மில்லியன் லிட்டர் அளவு குடிநீர் பெறும் அளவிலான கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பணி ஆண்டுக்கணக்கில் கிடப்பில் உள்ளது. இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க நிரந்தர முடிவாக கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து முழுவதுமாக தண்ணீரை பெற திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அதன்படி நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு அருகில் காலியாக உள்ள 10.50 ஏக்கர் நிலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக தினமும் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்படும். இதுதவிர பேரூரில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடி நீராக்கும் நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்த திட்டத்தை நிறைவேற்ற திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிலையம் அமைப்பதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டன. தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பணிகளை நிறைவேற்ற ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. பணிகளை நிறைவேற்ற பல்வேறு நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால் பல்வேறு காரணங்களால் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யமுடியாத நிலை இருந்து வருகிறது. குறிப்பாக ஜெர்மனி நாட்டு நிதியை பெற்று திட்டத்திற்கு விரைவில் இறுதி வடிவம் கொடுத்து பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இந்த திட்டத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம், விரிவாக்கப்பட்ட சென்னை மாநகரின் தென் பகுதியில் அமைந்துள்ள ஆலந்தூர், பெருங்குடி, கொட்டிவாக்கம், புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி, உத்தண்டி மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் சுமார் 6 லட்சத்து 46 ஆயிரம் பொதுமக்கள் பயன் அடைவார்கள்.

ஏற்கனவே நெம்மேலி, மீஞ்சூரில் இருந்து 200 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து 750 மில்லியன் லிட்டர் குடிநீர் பெற அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால் தற்போதைய தேவை 830 மில்லியன் லிட்டராகும். 4 நிலையங்களும் முழு செயல்பாட்டுக்கு வந்தால் சென்னை மாநகர் முழுவதும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மூலம் பெறப்படும் குடிநீரை வினியோகம் செய்ய முடியும். அதேபோல் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கும் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

தேசிய கடல் வள தொழில் நிறுவனம், மிதக்கும் கப்பலில் இருந்தபடியே, கடல்நீரை குடிநீராக்கி சாதனை படைத்துள்ளது. ஆழ்கடலில் இருந்தபடியே மிதக்கும் கப்பலில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையின் மூலம், நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் குடிநீர் தயாரிக்கும் திட்டத்தை, தேசிய கடல் வள தொழில்நுட்ப நிறுவனம், செயல்படுத்தி காட்டியது. சென்னையை அடுத்த எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 40 கி.மீ. தூரத்தில், கடல் நடுவே ஆழ்கடலில், சாகர் சக்தி மிதவை கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. பாலி எத்திலின் என்ற குழாய் கப்பலுக்கு அடியில் தொங்கவிட்டு 1,800 அடி ஆழத்தில் இருந்து குளிர்ந்த கடல்நீரை எடுத்து புதுமையான முறையில் கடல்நீர் குடிநீராக மாற்றப்பட்டது. பிறகு, அந்த குடிநீர் மிதவை நைலான் பையில் சேகரிக்கப்பட்டு, கரைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த பையில் 2 லட்சம் லிட்டர் தண்ணீரை சேகரிக்க முடியும். இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் செயல்படுத்தி சாதனை படைக்கப்பட்டு உள்ளது. ஒரு லிட்டர் குடிநீரை தயாரிக்க 6 பைசா செலவானது. நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் தயாரிக்க முடியும். ஆழ் கடலில் குளிர்ந்த நீரை எடுத்து, மிதவை கப்பல் மூலம் குடிநீராக மாற்றும் திட்டத்தை, உலகிலேயே முதன் முதலாக தமிழகம் தான் நிகழ்த்தி காட்டியது. இதேபோன்று அனல்மின் நிலையங்கள் வெளியேற்றும் சுடுநீர் குறைந்தது 10 டிகிரி வெப்பத்துடன் இருக்கும். இதை கொண்டும் குடிநீர் தயாரிக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com