

நீரில் மூழ்கினார்
சென்னை மூலக்கடை சர்மா நகரைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 18). கார் மெக்கானிக். விக்னேஷ், தனது 5 நண்பர்களுடன் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தொழவேடு கிராமத்தில் உள்ள தனது உறவினர் சந்திரன் என்பவரது வீட்டுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்றார்.
பின்னர் நண்பர்கள் அனைவரும் அருகே உள்ள ஆரணி ஆற்றில் குளித்தனர். சமீபத்தில் பெய்த பலத்த மழையால் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நண்பர்களுடன் உல்லாசமாக குளித்து கொண்டிருந்த விக்னேஷ், ஆழமான பகுதிக்கு சென்றதால் வெள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கினார். அருகில் இருந்த நண்பர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.
பிணமாக மீட்பு
இது குறித்து தகவல் அறிந்துவந்த தேர்வாய்கண்டிகை தீயணைப்பு நிலைய வீரர்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விக்னேசை பல மணிநேரம் போராடி பிணமாக மீட்டனர். ஊத்துக்கோட்டை போலீசார், விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.