ஈரோடு அருகே பரபரப்பு முதல்-அமைச்சர் குலதெய்வ கோவிலில் கொள்ளை முயற்சி பணம், நகை சிக்காததால் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்

ஈரோடு அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குலதெய்வ கோவிலில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. நகை, பணம் எதுவும் சிக்காததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
ஈரோடு அருகே பரபரப்பு முதல்-அமைச்சர் குலதெய்வ கோவிலில் கொள்ளை முயற்சி பணம், நகை சிக்காததால் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்
Published on

பவானி,

ஈரோடு அருகே சித்தோட்டை அடுத்த நசியனூரில் பிரசித்தி பெற்ற அப்பத்தாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 6 பேர் பூசாரியாக உள்ளார்கள். தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜை நடைபெறும். இரவு 7 மணிக்கு நடை அடைக்கப்படும். பிரதோஷ வழிபாடும் நடைபெறும். இந்த கோவிலுக்கு ஈரோடு, சேலம், எடப்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.

இது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குலதெய்வ கோவிலாகும். அவர் சேலம், எடப்பாடி செல்லும் போது இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வழக்கம்போல் பூஜை முடிந்ததும் கோவில் கதவை பூட்டிவிட்டு பூசாரி வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறந்து பூஜை செய்வதற்காக பூசாரி கர்ணன் என்பவர் வந்தார். அப்போது கோவில் கருவறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடந்தது. மேலும் அருகே இருந்த கோவில் அலுவலக கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவில் அலுவலகத்தில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதுபற்றி உடனே சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு கோவிலில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவையும் போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர்.

அப்போது கேமராவில் கொள்ளையர்கள் 2 பேரின் உருவம் பதிவாகியிருந்தது. அவர்கள் 2 பேரும் பனியன் அணிந்திருந்தனர். கோவிலில் அங்கும் இங்குமாக சுமார் 1 மணி நேரம் சுற்றி திரிந்தது கேமராவில் பதிவாகியுள்ளது. பூசாரி நடையை சாத்திவிட்டு சென்றபிறகு கொள்ளையர்கள் கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர் கோவில் கருவறை கதவின் பூட்டை கடப்பாரையால் நெம்பி உடைத்து திறந்துள்ளனர். அதேபோல் கோவில் அலுவலக கதவையும், பீரோக்களையும் உடைத்து திறந்துள்ளனர். ஆனால் பீரோக்களில் அம்மனின் நகை மற்றும் பணம் எதுவும் இல்லாததால் கொள்ளையர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த கோவிலில் மர்மநபர்கள் சிலர் கோவில் கதவின் பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை திருடிச்சென்றனர். தற்போது 2-வது முறையாக கொள்ளை முயற்சி நடந்துள்ளது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முதல்-அமைச்சர் குலதெய்வ கோவிலில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com