சித்ரா பவுர்ணமி விழா: 1,008 யாக குண்டங்கள் அமைத்து கலச விளக்கு வேள்வி பூஜை

சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி 1,008 யாக குண்டங்கள் அமைத்து கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.
சித்ரா பவுர்ணமி விழா: 1,008 யாக குண்டங்கள் அமைத்து கலச விளக்கு வேள்வி பூஜை
Published on

மதுராந்தகம்,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி மழைவளம் மற்றும் மக்கள்நலம் வேண்டி 1,008 சிறப்பு யாககுண்டங்கள் அமைத்து கலச விளக்கு வேள்வி பூஜை நடத்தப்பட்டது. இதை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் தொடங்கிவைத்தார். வேள்வியில் சூலம், ஒற்றை நாகம், இரட்டை நாகம், முக்கோணம், சதுரம், ஐங்கோணம், அறுகோணம் மற்றும் பல வடிவிலான 1,008 யாக குண்டங்களுடன் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் வழிகாட்டுதல் படி பல நுட்பமான சக்கரங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மேல் 1,008 கலசங்களும், 1,008 விளக்குகளும் பல விளைபொருட்களும் வைக்கப்பட்டு வேள்வி பூஜை நடத்தப்பட்டது.

இந்த வேள்விக்காக கடந்த மாதம் 30ந் தேதி குருபூஜை போடப்பட்டு சிறப்பான முறையில் வேள்வி பூஜை ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன.

கோபூஜை

1,000 செவ்வாடை பக்தர்கள் வேள்வி, உணவு, பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புற சுகாதார பணிகளில் ஈடுபட்டனர். கடந்த 30ந்தேதி முதல் நேற்று வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோபூஜை நடைபெற்றது.

வேள்வியில் தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பாஸ்கர், ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன், தமிழக அரசு உயர் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன், ரெயில்வே உயர் அதிகாரி ராஜேந்திரன், முன்னாள் உயர்அதிகாரிகள் ஜெயந்த், சிவானந்தம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் வாசன், ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் துணைத்தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமையில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com