பெரம்பலூரில் சினிமா காட்சி போல் சம்பவம்: காரில் கஞ்சா கடத்திய 2 பேரை துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த போலீசார்

பெரம்பலூரில் காரில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 180 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூரில் சினிமா காட்சி போல் சம்பவம்: காரில் கஞ்சா கடத்திய 2 பேரை துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த போலீசார்
Published on

மங்களமேடு,

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து மதுரைக்கு காரில் கஞ்சா கடத்தி வந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ய இருப்பதாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவஆசிர்வாதத்திற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க மதுரை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக்செல்வம், சேவியர் ஆகியோர் தலைமையிலான 10 பேர் கொண்ட சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் காரில் கஞ்சா கடத்தி வருபவர்களை பிடிக்க திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேவியர் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படையினரும், அதே நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்செல்வம் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படையினரும் நின்று கொண்டு அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்து கொண்டிருந்த கார்களை வழிமறித்து சோதனை செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் திருமாந்துறை சுங்கச்சாவடி வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த சிவப்பு நிற காரை போலீசார் மறிக்க முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்து அந்த காரை சினிமா பாணியில் போலீசார் தங்களது வாகனத்தில் துரத்தி சென்றனர். அப்போது சிறிது தூரத்தில் அந்த காரை திடீரென நிறுத்திய அதன் டிரைவர் காரை பின்னால் இயக்கி போலீசார் வந்த வாகனத்தை இடித்துள்ளார்.

அந்த காரில் மற்றொரு நபரும் இருந்தார். இதையடுத்து போலீசார் தங்களது வாகனத்தில், அந்த காரை முந்திச்சென்று முன்னால் போய் நிறுத்தினர். பின்னர் போலீசார் வாகனத்தில் இருந்து இறங்கி அந்த காரை சுற்றி வளைத்தனர். அப்போது காரை ஓட்டியவர், போலீசாரை தாக்குவதற்காக காரில் இருந்து துப்பாக்கி எடுப்பது போல் ஏதோ ஒரு ஆயுதத்தை எடுக்க முயன்றார். இதனை பார்த்ததும் சுதாரித்துக் கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்செல்வம் தனது துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார்.

பின்னர் அவர் கட்டையால் காரின் முன்பக்க கண்ணாடியில் அடித்தார். இதையடுத்து காரில் இருந்த 2 பேரும் காரின் கதவுகளை திறந்து தப்ப முயன்றனர். அப்போது போலீசார் துப்பாக்கி முனையில் அவர்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அந்த காரை சோதனை செய்ததில் அதில், 180 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த நபர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த முத்து மகன் முனியசாமி என்கிற படை முனியசாமி (வயது 29) என்பதும், மற்றொருவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள எருமைகுளம் பகுதியை சேர்ந்த சிறை மீட்டான் மகன் வழிவிடும் முருகன் (19) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் கஞ்சா கடத்த பயன்படுத்திய காரையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்து அருகே உள்ள மங்களமேடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மங்களமேடு போலீஸ் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜன் மற்றும் போலீசார் மங்களமேடு போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர்.

போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் ஆகியோர் கஞ்சா கடத்தி வந்த காரை பார்வையிட்டனர். பின்னர் படை முனியசாமி, வழிவிடும் முருகனிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து மங்களமேடு போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து படை முனியசாமியையும், வழிவிடும் முருகனையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரும், மதுரை தனிப்படை போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்தி வந்த காரை தடயவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் இருந்து மதுரை நோக்கி காரில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை சினிமா பாணியில் துரத்தி சென்று துப்பாக்கி முனையில் போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடியை தாண்டும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com