வேகமாக செல்லும் ஜீப்புகளால் விபத்து அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தோட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேகமாக செல்லும் ஜீப்புகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேகமாக செல்லும் ஜீப்புகளால் விபத்து அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

கம்பம்

கம்பம், உத்தமபாளையம், கோம்பை, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 200-க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் கேரளாவில் உள்ள குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், அடிமாலி, கட்டப்பனை ஆகிய பகுதிகளில் உள்ள ஏலக்காய் மற்றும் காபி தோட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்களை ஏற்றி செல்கின்றனர். காலையில் வேலைக்கு செல்லும் போதும், மாலையில் வேலை முடிந்து திரும்பும் போதும் அதிகளவில் ஆட்களை ஏற்றிக்கொண்டு வருகிறார்கள். ஜீப்பில் இருப்பவர்கள் கை, கால்கள் வெளியே தெரியும்படி செல்கின்றனர்.

ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கம்பம்மெட்டு மலைப்பாதையில் இந்த ஜீப்புகள் அசுர வேகத்தில் செல்வதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்ததுடன், ஒரு சிலர் கை, கால்களையும் இழந்துள்ளனர். விபத்து நடக்கும் சமயத்தில் போலீசார் சோதனையை பலப்படுத்தி இந்த ஜீப்புகளை இயக்குவதற்கு பல விதமான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். இருந்தாலும் ஒரு சில தினங்களில் ஜீப் டிரைவர்கள் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு செல்கின்றனர்.

நாள்தோறும் போலீசார் வாகன சோதனையை மேற்கொண்டு விதிமுறைகள் மீறி இயக்கப்படும் ஜீப்புகளுக்கு அபராதம் விதிக்கின்றனர். வாகன சோதனையில் ஈடுபடுவதை அறிந்த ஜீப் ஓட்டுனர்கள் போலீசாரை ஏமாற்றி விட்டு குண்டும், குழியுமாக ஆபத்தான முறையில் உள்ள காட்டுப்பாதைகளின் வழியாகவும், சிறிய வீதிகள் வழியாகவும் அதிக வேகத்தில் செல்கின்றனர். இதனால் பெரும் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கேரளாவுக்கு வேலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் ஜீப்புகளில் 12 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும், அதிகளவில் ஆட்களை ஏற்றிச்செல்லக்கூடாது, வண்டிக்குரிய அனைத்து முறையான ஆவனங்களும் வண்டியில் இருக்க வேண்டும், டிரைவர்கள் காக்கி சீருடை அணிந்திருக்க வேண்டும், குறிப்பிட்ட அளவு வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும், உட்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் போலீசார் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேனர்களையும் வைத்துள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் இதை கடைபிடிப்பது கிடையாது. 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு உடல் வெளியே தெரியும் அளவிற்கு கூட்ட நெரிசலில் அசுர வேகத்தில் செல்கின்றனர்.

மேலும், ஜீப்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகமும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் இணைந்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com