பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சிட்லப்பாக்கத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தாம்பரம்,

8-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையை அடுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகில் நேற்று காலை காஞ்சீபுரம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவருமான தியாகராஜன் தலைமை தாங்கினார்.

இதில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதே போல் பல்லாவரத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்பு தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும், ஏற்கனவே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதிய குழுவை உடனடியாக அமல்படுத்திட வேண்டும்.

அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதத்தை வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனாலும் அரசு எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காததால் இன்றும் (நேற்று) தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

தமிழக அரசு உடனடியாக எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இல்லையென்றால் திட்டமிட்டபடி செப்டம்பர் 7-ந் தேதி முதல் தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மாதவரம் மண்டல அலுவலகம் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சுதர்சனம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

இதனால் மாதவரம்-மூலக்கடை நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் எதிரே திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்தில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் (ஜாக்டோ-ஜியோ) சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதில் ஏராளமான ஆசிரியைகள் கலந்துகொண்டு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் ஆவடி தாசில்தார் அலுவலகம் எதிரே 400-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com