

துவாக்குடி,
திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் துப்புரவு பணியாளர்கள், திருவெறும்பூர் வார்டு பகுதிகளில் வீடு, வீடாக மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து குப்பைகளை சேகரித்து வருகின்றனர். அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண் உரம் செயலாக்க மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அவற்றை இயற்கை உரமாக மாற்றுகின்றனர்.
தற்போது திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் பகுதியில் உள்ள 5 வார்டுகளில் நாளொன்றுக்கு சுமார் 4 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இப்பகுதியில் துப்புரவு பணியாளர்களால் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மூட்டையாக கட்டப்பட்டு, அவற்றை மாநகராட்சி வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு, திருவெறும்பூர் உய்யகொண்டான் வாய்க்கால் கரையையொட்டி உள்ள சாலையோரங்களில் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
தீ வைத்து கொளுத்தினர்
மேலும் மாநகராட்சியின் 65-வது வார்டு பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதனால் மாநகராட்சி வாகனம் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும், கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. புகையால் 65-வது வார்டு பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. இதையடுத்து குப்பைகளில் எரிந்த தீ அப்பகுதியினரால் அணைக்கப்பட்டது.
சிறைபிடிப்பு
இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து, நேற்று காலை வழக்கம்போல் சாலையோரத்தில் குப்பைகளை கொட்ட வந்த திருச்சி மாநகராட்சி குப்பை லாரியை, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் லெனின் உள்ளிட்டோர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த 65-வது வார்டுக்கு உட்பட்ட சுகாதாரத்துறை ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மாநகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
குப்பைகளை கொட்டக்கூடாது
அப்போது உய்ய கொண்டான் வாய்க்கால் கரையோரத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது என்றும், கொட்டிய குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. மேலும் கடந்த 30-ந் தேதியில் இருந்து திருவெறும்பூர் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களிடம் இருந்து மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை வாங்காததால், வணிக நிறுவனங்களில் தேங்கும் குப்பைகளை சாலையோரங்களிலும், வாய்க்கால்களிலும் கொட்டுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே வணிக நிறுவனங்களிடம் மீண்டும் குப்பைகளை சேகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதனை மாநகராட்சி அலுவலர்கள் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, சிறை பிடித்திருந்த குப்பை லாரியை பொதுமக்கள் விடுவித்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதோடு, திருவெறும்பூர்- துப்பாக்கி தொழிற்சாலை செல்லும் சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.