

வேலூர்,
வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பொதுமக்கள் கலந்துகொண்டு முதியோர் ஓய்வூதியம், வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 735 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அணைக்கட்டு தாலுகா பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பொருளாதாரத்தில் பின்தங்கிய பட்டியல் இன மக்களாகிய நாங்கள் கடந்த 60 ஆண்டுகளாக பூஞ்சோலை கிராமத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் வசித்துவரும் 40 வீடுகளில் 10 வீடுகள் நீர்த்தேக்க குட்டையில் இருப்பதாகவும், அதை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார். எங்களுக்கு வேறு வாழ்விடம் கிடையாது. எங்கள் வருவாய் எங்களுடைய விவசாய நிலங்களை நம்பியே உள்ளது. வீடுகளை இடித்தால் வாழ்க்கையே பறிபோகும் நிலை உள்ளது. எனவே வீடுகளை அகற்றும் முடிவை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆம்பூர் தாலுகா வெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ஜெயகாந்தா, இந்திராணி, அன்னபூரணி ஆகியோர் கொடுத்துள்ள மனுவில், நாங்கள் புறம்போக்கு நிலத்தில் குடிசை வீட்டில் வசித்து வருகிறோம். எங்கள் குடிசை வீட்டுக்கு வரி செலுத்தியிருக்கிறோம். மின் இணைப்பு பெற்றுள்ளோம். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக குடிசை வீட்டுக்கு பட்டா கேட்டு மனு கொடுத்து வருகிறோம். ஆனால் பட்டா வழங்கவில்லை. எனவே எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியை சேர்ந்த அம்சவேணி என்ற பெண் கொடுத்துள்ள மனுவில், வள்ளலார் பகுதி 3-ல் உள்ள குடிநீர் தொட்டி அருகே கடந்த 10 வருடங்களாக தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறேன். எனது கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் டிபன் கடை மூலம் வரும் வருமானத்தை கொண்டுதான் குடும்பம் நடத்தி வருகிறோம். தற்போது எங்கள் கடையை காலி செய்யுமாறு சிலர் மிரட்டி வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கொடுத்துள்ள மனுவில், நாங்கள் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். எங்களுக்கு கூலி உயர்வு, பணி நிரந்தரம், அடையாள அட்டை, சீருடை வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில், புதிதாக பிரிக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, புதூர்நாடு, கொரட்டி ஆகிய 5 பிர்க்காக்கள் உள்ளன. அதில் திருப்பத்தூர் பெரிய தாலுகாவாக இருப்பதால் இரண்டாக பிரித்து கொரட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், வேலூரை அடுத்த நெல்வாய் கிராமத்தில் இருந்து அல்லிவரம், பென்னாத்தூர், ஆவாரம்பாளையம், திருமலைக்கோடி, பொய்கை வழியாக லத்தேரி வரை ரிங் ரோடு அமைக்கப்படுகிறது. இதற்காக சாலையின் ஒரு பகுதியில் மட்டும் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சாலையின் இருபுறமும் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் ஒன்றும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 13 பேருக்கு தையல் எந்திரம் ஆகியவற்றை கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார். இதில் துணை கலெக்டர் (பயிற்சி) பிரவீணா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.