மாணவிகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிடுவதாக கூறி ரூ.20 ஆயிரம் கேட்டு மாணவருக்கு மிரட்டல்

சக மாணவிகளுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.20 ஆயிரம் கேட்டு கல்லூரி மாணவரை மிரட்டியதாக சக மாணவர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மாணவிகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிடுவதாக கூறி ரூ.20 ஆயிரம் கேட்டு மாணவருக்கு மிரட்டல்
Published on

நாமக்கல்,

நாமக்கல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவரது மகன் திருமுருகன் (வயது 20). இவர் நாமகிரிப்பேட்டையில் ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார்.

இவரது செல்போனை கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் வாங்கி தகவல்களை பார்ப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இவர் கல்லூரிக்கு கொண்டு சென்ற செல்போன் திருட்டு போனது. இதையடுத்து திருமுருகனின் பெற்றோர் வேறு ஒரு செல்போனை, அவருக்கு வாங்கி கொடுத்தனர்.

இந்த நிலையில் இவரது செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் அவருடன் இருக்கும் மாணவிகள் புகைப்படங்களை மர்ம நபர்கள் அனுப்பினர். அந்த படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.20 ஆயிரம் கேட்டனர். அதற்கு திருமுருகன் ரூ.15 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை நாமக்கல்லில் உள்ள சினிமா தியேட்டர் ஒன்றின் முன்பு கொண்டு வந்து தருமாறு அவர்கள் கூறினர். இதையடுத்து திருமுருகன் அங்கு சென்றபோது செல்போனில் மிரட்டியது தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் ஈஸ்வரமூர்த்திபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் (20), மூலப்பள்ளிப்பட்டியை சேர்ந்த சதீஷ் (20) என்பது தெரியவந்தது.

அப்போது வசந்தகுமார், பணத்தை எடு, இல்லை எனில் கத்தியால் குத்தி விடுவேன் என திருமுருகனை மிரட்டியதாகவும், சதீஷ்குமார் அவரது பர்சை பறித்து சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருமுருகன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமார், சதீஷ் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com