

மதுரை,
மதுரை மாநகராட்சி, தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம், பசுமை வேலைகளுக்கான திறன் மையம் ஆகியவை இணைந்து துப்புரவு பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை நடத்தியது. இந்த பயிற்சி முகாம் மாநகராட்சி பூங்கா முருகன் கோவிலில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மாநகராட்சியின் முகம் யார் என்றால் தூய்மையை கொண்டுவரும் துப்புரவு பணியாளர்கள்தான். மாநகர் தூய்மையாக இருப்பதற்கு காவலராக செயல்படுபவர்கள் துப்புரவு பணியாளர்கள் தான். இந்த 5 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சியில் வழங்கப்படும் அறிவுரைகள் மற்றும் பயிற்சியினை அறிந்து கொண்டு தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
துப்புரவு பணியாளர்கள் குப்பை அள்ளும் கருவிகள், சாக்கடை நீர் அடைப்பு சரிசெய்யும் ரோபோ போன்ற எந்திரங்கள் வாங்கி தொழில் செய்ய தேசிய துப்புரவு பணியாளர் சம்மேளனம் மூலம் 4 சதவீதம் குறைந்த வட்டியில் கடன் வசதியும், மானியத்துடன் கடன் உதவி செய்யப்படுகிறது. மேலும் பெண்களுக்கு 3 சதவீதம் குறைந்த வட்டியில் கடனும் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியினை நல்லமுறையில் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக நம்முடைய உயிர் மற்றும் பாதுகாப்பு தான் நமக்கு முக்கியமானது. எனவே பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பயிற்சி வகுப்பில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்குவது, தினந்தோறும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக தயாரிப்பது குறித்தும், கழிவுநீர் தொட்டிகளில் பணி செய்யும்பொழுது எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.