

வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் அள்ளப்படும் குப்பைகள் தற்போது கடற்கரைக்கு செல்லும் வழியில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டது. இதையொட்டி நகராட்சியின் சார்பில் கடற்கரை நாலுகால் மண்டபம் அருகே 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி செலவில் திடக்கழிவு மேலாண்மை பணி திட்டத்திற்கான கட்டிடம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு கட்டிட பணிக்கான பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.இதேபோல் வேதாரண்யத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ. 2 கோடி செலவில் தொகுப்பு வீடு கட்டும் பணியை தொடங்கி வைத்தார். இதில் உதவி கலெக்டர் கார்த்திகேயன், நகராட்சிஆணையர் ரவிச்சந்திரன், மேலாளர் இப்ராஹிம், பொதுப்பணி மேற்பார்வையாளர் கோமதி நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.