செல்போன் கோபுரத்தில் ஏறி 2 பெண்கள் போராட்டம்

மேட்டுப்பாளையத்தில் பொதுக்கழிப்பிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரத்தில் ஏறி 2 பெண்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர்.
செல்போன் கோபுரத்தில் ஏறி 2 பெண்கள் போராட்டம்
Published on

மேட்டுபாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுபாளையம்-அன்னூர் ரோடு உக்கான் நகரில் 105 குடும்பங்களை சேர்ந்த மக்கள் குடிசை போட்டு குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு இலவச பட்டா கொடுக்கப்பட்டது. ஆனாலும் அங்கு கழிப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்பட வில்லை. இதற்காக அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து கோர்ட்டில் வழக்கு உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இலவச வீட்டுமனை பட்டா பெற்று குடியிருக்கும் சிலர், அங்கு பொதுக் கழிப்பிடம் கட்ட நேற்று காலை குழி தோண்டினர். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த இலவச வீட்டுமனை பெறாத சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (வயது 31), மணிமேகலை (35) ஆகியோர் பொதுக் கழிப்பிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து திடீரென்று அங்கிருந்த 70 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு மணி, இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் தாசில்தார் ஆர்.ரங்கராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் விரைந்தனர்.

செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் பொதுக்கழிப்பிடம் கட்டும் பணிகளை நிறுத்தினால்தான் கீழே இறங்குவோம் என்று கூறினர். பல முறை எடுத்துக்கூறியும் அந்த பெண்கள் கீழே இறங்காமல் தொடர்ந்து போராடி வந்தனர்.

இதையடுத்து பொதுக்கழிப்பிடம் கட்டுவதை நிறுத்த, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதை ஏற்று சுமார் 2 மணிநேரத்துக்கு பிறகு அந்த 2 பெண்களும் போராட்டத்தை கை விட்டனர்.உடனே, பெண் போலீஸ் ரேணுகா மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சிலர், செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்களையும் பத்திரமாக கீழே இறக்கினர். பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் வேன் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com