மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் மூலம், 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் 14.9.2018 வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட உள்ளது.

இந்த முகாமில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, வழங்குதல், உதவி உபகரணங்கள் தேவைப்படும் குழந்தைகள் பதிவு செய்தல், பராமரிப்பு மற்றும் கல்வி உதவித்தொகை பெற பதிவு செய்தல், ரெயில் பயணச் சலுகை, பாதுகாவலர் பயணச் சான்று பெற பதிவு செய்தல், முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள், சிறப்பு மருத்துவ முகாம் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த குழந்தைகளுக்கு வீடு சார்ந்த பயிற்சி, ஆரம்ப கால ஆயத்த பயிற்சி மையம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி, தசை இயக்க பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளுக்கான பதிவுகளும் செய்யப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் வருகிற 24-ந்தேதி தூத்துக்குடி சிவந்தாகுளம் நகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், 28-ந்தேதி கோவில்பட்டி வ.உ.சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 29-ந்தேதி புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 31-ந்தேதி கருங்குளம் செய்துங்கநல்லூர் ஆர்.சி. தொடக்க பள்ளியிலும், வருகிற 3.9.2018 அன்று ஆழ்வார்திருநகரி, மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், 4.9.2018 அன்று உடன்குடி டி.என்.டி.டி.ஏ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 6.9.2018 அன்று ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 7.9.2018 அன்று விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், 10.9.2018 அன்று திருச்செந்தூர். டி.பி. ரோடு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியிலும், 11.9.2018 அன்று சாத்தான்குளம், கொமடிக்கோட்டை சந்தோஷ் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 12.9.2018 அன்று கயத்தாறு, வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், 14.9.2018 ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ். தொடக்க பள்ளியிலும் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் கலந்து கொள்ளும் குழந்தைகள் 5 பாஸ்போட் அளவு புகைபடம், ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு நகல் மற்றும் குழந்தை சார்ந்த மருத்துவ அறிக்கையையும் இத்துடன் எடுத்து வர வேண்டும். மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அதிக அளவில் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், பொது சுகாதார இணை இயக்குனர் டாக்டர் பரிதா செரின், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெய்சிலி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட அலுவலர் சக்திவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசெல்வி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com