மேட்டூர் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி அந்தியூரில் கொ.ம.தே.க.வினர் ஆர்ப்பாட்டம்

மேட்டூர் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி அந்தியூரில் கொ.ம.தே.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டார்.
மேட்டூர் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி அந்தியூரில் கொ.ம.தே.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

அந்தியூர்,

அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் நீர் ஆதார திட்டங்களை நிறைவேற்ற கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அந்தியூர் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில அமைப்பாளரும், பவானி, அந்தியூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான துரைராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லோகநாதன் முன்னிலை வகித்தார்.

மேட்டூர் உபரி நீர் திட்டம்

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியதுடன், கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் மேட்டூர் உபரி நீர் திட்டம், தோனிமடுவு திட்டம், மணியாச்சி வழுக்குப்பாறை திட்டம், டி.என்.பாளையம் வேதப்பாறை அணை திட்டம் ஆகிய நீர் ஆதார திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும். மேலும் பவானி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீரை தடுக்க வேண்டும். அந்தியூர் பாரம்பரிய வாரச்சந்தையை இடம் மாற்றுவதை தடுக்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊர்வலம்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இதில் மாவட்ட பொறுப்பாளர் ஸ்ரீகுமார், மாவட்ட துணை செயலாளர் கணபதி மற்றும் அந்தியூர் மற்றும் பவானி சட்டமன்ற தொகுதி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அண்ணாமடுவு பகுதியில் இருந்து கொ.ம.தே.க.வினர் ஊர்வலமாக அந்தியூர் பஸ் நிலைய பகுதி வரை வந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com