கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களில் மேஜை, இருக்கைகள் செய்த இளைஞர்கள்

கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களின் அடி மற்றும் நுனிப்பகுதிகளை கொண்டு மேஜை, இருக்கைகளை இளைஞர்கள் அமைத்துள்ளனர்.
கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களில் மேஜை, இருக்கைகள் செய்த இளைஞர்கள்
Published on

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி அதிகாலை கஜா புயல் தாக்கியதில், விவசாயிகள் வருமானத்திற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் வளர்த்த மரங்கள் சாய்ந்தன. அந்த மரங்களை எப்படி அகற்றுவது, இந்த துயரத்தில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்தனர். பெரும்பாலான இடங்களில் தோட்டங்களில் விழுந்த மரங்கள் இன்றும் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கின்றன.

பிரதான சாலை ஓரங்களில் பெரிய லாரிகள் எளிதாக சென்றுவரக் கூடிய பகுதிகளில் உள்ள தென்னை மரங்களை மட்டும் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் செங்கல் சூளைக்கும், கட்டுமானப் பணிக்கும் என்று சிலர் மரங்களை வெட்டி எடுத்துச் செல்கின்றனர். இதில் தென்னை மரத்தின் அடிப்பகுதியும், நுனிப்பகுதியும் அந்தந்த தோட்டங்களிலேயே பரவிக் கிடக்கின்றன. அவற்றை அகற்ற எந்திரம் இல்லை.

இந்நிலையில் கீரமங்கலம் அருகில் உள்ள நெய்வத்தளி கிராமத்தில் தன்னார்வ இளைஞர்களை கொண்டு நமது நண்பர்கள் விவசாய மீட்புக்குழு உருவாக்கப்பட்டது. தென்னை மரங்கள் சாய்ந்து கிடக்கும் தோட்டங்களுக்கு அக்குழுவினர் சென்று எந்திரங்களைக் கொண்டு மரங்களை அறுத்து அகற்றி, தோட்டங்களை சுத்தம் செய்து கொடுக்கிறார்கள்.

மேலும் அக்குழுவினர் எந்திரம் மூலம் அறுத்து அகற்றும் தென்னை மரங்களின் அடிப்பகுதியை டிராக்டர் போன்ற வாகனங்களில் ஏற்ற முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் யோசித்த அவர்கள், தென்னை மரங்களின் அடிப்பகுதியை மேஜை, இருக்கையாக செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து சாலையோர டீக்கடைகள், கேளிக்கை விடுதிகள், கடற்கரை விடுதிகள், பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு மற்றும் கல் இருக்கைகளை போல மரத்தின் அடிப்பகுதியை மேஜையாகவும், நுனிப்பகுதியை இருக்கையாகவும் வடிவமைத்தனர். ஒருவர் தென்னை மர இருக்கையில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டு, தேனீர் குடிக்க வசதியாக அந்த இருக்கை அமைந்தது. அதன் பிறகு அவர்கள் அகற்றிய அத்தனை தென்னை மரங்களின் அடி, நுனி பகுதிகளை மேஜை, இருக்கைகளாக அமைத்து வைத்துள்ளனர்.

இது குறித்து நமது நண்பர்கள் விவசாய மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் நெவளிநாதன் கூறுகையில், தோட்டங்களில் அகற்றப்பட்ட மரங்களில் தேவையில்லாமல் கிடந்த அடிப்பகுதி மற்றும் நுனிப்பகுதியை மேஜை, இருக்கை போன்று செய்துள்ளோம். எனவே விடுதிகள் நடத்துபவர்கள், விடுதி தொடங்க நினைப்பவர்கள் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விதமாக தென்னை மரங்களில் இருந்து அறுக்கப்படும் அடி, நுனி பகுதிகளை வாங்கிச்சென்று அழகாக இருக்கைகளாக அமைத்துக் கொள்ளலாம். பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கல் இருக்கைகள் செய்வதை விட, குறைந்த விலையில் விவசாயிகளுக்கு கை கொடுக்க மர இருக்கைகளை அமைக்கலாம், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com