கூடலூர், பந்தலூரி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

கூடலூர், பந்தலூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கூடலூர், பந்தலூரி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
Published on

கூடலூர்,

கூடலூர் மற்றும் பந்தலூர் அருகே நெல்லியாளம், மேங்கோரேஞ்ச், உப்பட்டி, அட்டி, மேஸ்திரி குன்னு, சோலாடி, அத்திச்சால், வடக்கஞ்சேரி ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு பணியாற்றி வரும் சுகாதார அலுவலர்கள், தன்னார்வலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:- தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் 14 நாட்கள் வெளியே வரக்கூடாது. வெளிநபர்கள் உள்ளே நுழைய கூடாது. இதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அங்கு வசிப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வீடு, வீடாக தொற்று கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ள தன்னார்வலர்கள் யாருக்கேனும் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால், உடனே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். கொரோனா 2-வது அலையில் முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே பொதுமக்கள் விழிப்புடன், பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் தொற்று குறித்து அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாத்திரைகள் வழங்கி தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அத்திச்சால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்து, 35 ஆதிவாசி மக்களுக்கு காய்கறிகளை வழங்கினார்.

ஆய்வின்போது கூடலூரு ஆர்.டி.ஓ. ராஜ்குமார், ஊராட்சி உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார், நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாஸ்கரன், தாசில்தார் தினேஷ்குமார், கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன் குமாரமங்கலம், ஜெய்சங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com