கூலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு

கூலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு செய்தார்.
கூலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு
Published on

சேலம்,

ஆத்தூர் கூலமேட்டில் இன்று (புதன்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்காக திருச்சி, அரியலூர், வேலூர், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 580 ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்து வரப்படுகின்றன. ஆத்தூர், தம்மம்பட்டி, வீரகனூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஜல்லிக்கட்டை பார்க்க ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால், தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு குறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:


ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களின் உடற்கூறு தகுதியை பரிசோதித்து சான்றிதழ் வழங்குவதோடு, அங்கு போதுமான டாக்டர்கள், மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் போன்ற வசதிகள் செய்திருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளையும் கால்நடை டாக்டர்கள் பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும். முக்கியமாக மத்திய பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிககப்பட வேண்டும்.


போட்டியின்போது காளைகள் காயம் அடைந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க தயார் நிலையில் கால்நடை டாக்டர்கள் இருக்க வேண்டும். காளைகள் மீது மிளகாய் பொடி, மூக்கு பொடி, சகதி ஆகியவற்றை தடவக்கூடாது. காளைகளுக்கு உடலில் எந்த இடத்திலும் காயங்கள் இருக்கக்கூடாது. அவ்வாறு இருப்பின் விதிமுறைகளின்படி அந்த காளைகளை திருப்பி அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அமைப்பாளர்கள் போட்டி நெரிமுறைகளை, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com