உடுமலை அருகே வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

உடுமலை அருகே ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.
உடுமலை அருகே வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
Published on

உடுமலை,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேற்று உடுமலைக்கு வந்திருந்தார். அவர் உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போடிபட்டி ஊராட்சி பகுதிக்கு சென்றார்.அங்கு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மரக்கன்றுகள் வளர்ப்பு நாற்றுப்பண்ணையை ஆய்வு செய்தார்.

பின்னர் நூலக கட்டிட வளாகத்தில் ஜல்சக்தி அபியான் 2019-20 திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டி மற்றும் ரேணுகாதேவி நகரில் பசுமைவீடுகள் திட்டத்தில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பசுமைவீடு ஆகியவற்றை நேரில் சென்று பார்த்தார். இந்த ஊராட்சி பகுதியில் தாய் திட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையத்தை அவர் ஆய்வு செய்தார்.

பள்ளபாளையம் ஊராட்சி செல்லாண்டியம்மன் காலனியில் பாரத பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் உடுமலை ஐஸ்வர்யா நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் நடப்பட்டிருந்த மரக்கன்றுகளையும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார்,செயற்பொறியாளர் பிரேம்குமார்,உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com