குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை இணையதளத்தில் புகார் செய்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை இணையதளத்தில் புகார் செய்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறினார்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை இணையதளத்தில் புகார் செய்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை
Published on

திருச்சி,

குழந்தைகள் கடத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை புகார் செய்வதில் வட மாநிலங்களை விட தென் மாநில மக்களிடம் நல்ல விழிப்புணர்வு உள்ளது. இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தற்போது இணையதளத்தில் www.nc-p-cr@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி உள்ளது. இந்த இணைய தளத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை புகார் செய்தால் புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக தேசிய அளவில் 24 உறுப்பினர்களை கொண்ட உடனடி தீர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையம் உருவாக்கப்பட்ட ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் 110 புகார்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு உள்ளது. இதில் 2 புகார்கள் தமிழகத்தில் இருந்து வந்தவை ஆகும். உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தான் இந்த சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில் குழந்தைகள் பற்றிய செய்தி, படங்கள் வரும்போது அதனை பார்ப்பவர்கள் மற்றவர்களுக்கு பகிரும் முன்பாக இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று ஒரு நிமிடம் யோசித்து பார்க்கவேண்டும். பெற்றோர்கள் தினமும் 15 முதல் 20 நிமிட நேரத்தை தங்களது குழந்தைகளுடன் செலவிட்டால் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு, வன்முறையில் இருந்தும் பாதுகாக்கலாம்.

பாலியல் வன்முறைகளில் இருந்து இளம் சிறார்களை பாதுகாக்கும் சட்டம்-2012 (போக்சோ) மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தற்போது கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் பெறப்படும் புகார்கள் மீதும் கடும் தண்டனை வழங்க பாராளுமன்றத்தில் விரைவில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com