நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததை கண்டித்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை தி.மு.க. சார்பில் முற்றுகையிடுவோம்

வருகிற 16–ந்தேதி தி.மு.க. சார்பில் அணுமின் நிலையத்தை முற்றுகையிடுவோம் என்று முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளார்.
நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததை கண்டித்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை தி.மு.க. சார்பில் முற்றுகையிடுவோம்
Published on

நெல்லை,

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததை கண்டித்து வருகிற 16ந்தேதி தி.மு.க. சார்பில் அணுமின் நிலையத்தை முற்றுகையிடுவோம் என்று முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளார்.

ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கலெக்டர் ஷில்பாவை சந்தித்து மனு கொடுத்தார்.

அந்த மனுவில், கூறியதாவது:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 95 சதவீதம் பேர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும், வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் கூடங்குளம் பகுதியில் வசிப்பதாக போலியாக குடியுரிமை சான்று சமர்ப்பித்து பணியில் சேர்ந்து உள்ளனர். போலியான குடியுரிமை சான்று சமர்ப்பித்து பணியில் சேர்ந்து உள்ளவர்களை பணிநீக்கம் செய்து விட்டு உள்ளூரில் நிலம் கொடுத்தவர்களையும், இந்த பகுதியை சேர்ந்த தகுதியானவர்களையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும்.

1999ம் ஆண்டு கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் நியமனத்தில் நிலம் கொடுத்தவர்களுக்கும், இந்த பகுதியை சேர்ந்த தகுதியான நபர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 56 பணியிடங்களும் நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்கப்படாமல், அணுமின் நிலையத்தில் வேலை செய்கின்றவர்களின் உறவினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். விதிமுறையை மீறி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதை நிறுத்திவிட்டு 1999ம் ஆண்டு ஒப்பந்தப்படி நிலம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்கவேண்டும்.

மத்திய அரசு நிறுவனமான மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம், கொங்கன் ரெயில்வே ஆகியவற்றில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அது போல் கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் நிலம் கொடுத்தவர்களுக்கும், அந்த பகுதி மக்களுக்கும் உடனடியாக வேலை வழங்கவேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3வது, 4வது அலகிற்கு சி மற்றும் டி பிரிவில் 222 பணியிடங்களுக்கு வெளி மாநிலத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் பணியாற்றி வருபவர்களை பணிமாறுதல் செய்து நிர்வாக ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை கண்டித்து தி.மு.க.வினர் எனது தலைமையில் 2732018 அன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். இந்த போராட்டத்தை தொடர்ந்து பணி மாறுதல் ஆணை ரத்து செய்யப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கும், இந்த பகுதி மக்களுக்கும் வேலை வழங்கவேண்டும். பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லை எனில் எனது தலைமையில் வருகிற 16ந்தேதி தி.மு.க. மற்றும் அந்த பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்று கூடி அணுமின்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com