ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுவையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் - நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்பு

ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுவையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் - நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்பு
Published on

புதுச்சேரி,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான தலித் இளம்பெண் பாலியல் பலத்காரம் செய்து கொல்லப்பட்டார். அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா ஆகியோர் சென்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியபோது ராகுல்காந்தி கீழே தள்ளி விடப்பட்டார். அத்துடன் தடையை மீறியதாக ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரை கைது செய்தனர்.

இதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுவையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந் தது. அண்ணாசிலை அருகே முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜான்குமார், துணைத்தலைவர் நீல.கங்காதரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின்போது ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய உத்தரபிரதேச முதல்-மந்திரி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், உத்தரபிரதேசத்தில் தலித் சமுதாய பெண்கள் கற்பழிப்பு சம்பவம் தொடர்கதையாக உள்ளது. மத்தியில் உள்ள மோடி அரசு தலித் விரோத அரசாக உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதுடன் முதல்- மந்திரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com