தீபாவளி நகை சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி நகை கடை முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போலீசாருடன் வாக்குவாதம்

தீபாவளி நகை சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நகை கடை முன்பு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீபாவளி நகை சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி நகை கடை முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போலீசாருடன் வாக்குவாதம்
Published on

பூந்தமல்லி,

சென்னை போரூர் 4 சாலை சந்திப்பில் மனோஜ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாதந்தோறும் ரூ.500 முதல் ரூ.1,500 வரை தீபாவளி நகை சீட்டு கட்டி வந்தனர்.

இவ்வாறு சீட்டு கட்டியவர்களுக்கு அவர்கள் கட்டிய தொகைக்கு ஏற்ப நகை, வெள்ளிப்பொருட்களை தீபாவளி பண்டிகைக்கு முன்பு கொடுக்கவேண்டும். ஆனால் கடை உரிமையாளர்கள், நகை சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு கடை மற்றும் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசில் புகார் செய்ததுடன், நகை கடையின் முன்பு பலமுறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் தாங்கள் அளித்த புகாரின் மீது போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறி நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பொதுமக்கள், நகை கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் நகை கடை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போரூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த வளசரவாக்கம் போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்டநேரத்துக்கு பிறகு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com