ஆட்டுப்பட்டி அமைக்க இடம் கேட்டு தொந்தரவு செய்ததால் இரவு காவலாளியை வெட்டி கொலை செய்தேன் கைதான அண்ணன் மகன் வாக்குமூலம்

ஓமலூர் அருகே ஆட்டுப்பட்டி அமைக்க இடம் கேட்டு தொந்தரவு செய்ததால் இரவு காவலாளியை வெட்டி கொலை செய்ததாக கைதான அண்ணன் மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆட்டுப்பட்டி அமைக்க இடம் கேட்டு தொந்தரவு செய்ததால் இரவு காவலாளியை வெட்டி கொலை செய்தேன் கைதான அண்ணன் மகன் வாக்குமூலம்
Published on

ஓமலூர்,

இரவு காவலாளி

ஓமலூரை அடுத்த உம்பிளிக்கம்பட்டி பகுதியில் நாராயணன் என்பவர் நடத்தி வரும் கல்குவாரியில் நடுப்பட்டியை சேர்ந்த சேகர் (வயது 40) இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். பகல் நேரத்தில் ஆடுகளை மேய்த்த அவர் கல்குவாரி பகுதியில் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு இரவில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சேகர் கல்குவாரியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்.

அதில் கல்குவாரியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, சேகரின் அண்ணன் மகன் அண்ணாமலை (30) கொலை நடந்த அன்று கல்குவாரியில் நடந்து சென்றது தெரியவந்தது. தொடர் விசாரணையின்போது, போலீசாரின் மோப்ப நாயும் அண்ணாமலையை கவ்வி பிடித்தது. இதையடுத்து போலீசார் அண்ணாமலையிடம் தீவிர விசாரணை நடத்தியதில் சேகரை தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

வெட்டிக்கொலை

இதுகுறித்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், நடுப்பட்டி காக்காயன்காடு பகுதியில் வசித்து வந்ததாகவும், கல்குவாரியின் மேல்பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை அனுபவத்தில் வைத்திருந்தேன். அந்த இடத்தில் நான் ஆட்டுப்பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தேன். இதையடுத்து அரசு புறம்போக்கு நிலத்தில் எனது சித்தப்பா சேகர் ஆட்டுப்பட்டி அமைக்க அனுமதி கேட்டார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன்.

தொடர்ந்து அந்த இடத்தை கேட்டு சேகர் தொந்தரவு செய்து வந்ததால் ஆத்திரமடைந்த நான் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று சேகரின் ஆட்டுப்பட்டிக்கு நான் சென்றேன். அப்போது உனக்கு இங்கு என்ன வேலை என சேகர் என்னிடம் கேட்டார். அப்போது எங்களுக்குள் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த நான் அரிவாளால் சேகரின் கழுத்து, தலையில் வெட்டிக்கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் தனது ஆட்டுப்பட்டிக்கு சென்று படுத்து கொண்டேன்.

கைது

இதனையடுத்து நேற்று முன்தினம் காலை சேகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக ஊர் மக்கள் கூறி திரண்டபோது ஒன்றும் தெரியாதது போல் கூட்டத்தோடு கூட்டமாக நின்றேன். ஆனால் கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் மோப்ப நாய் கவ்வி பிடித்ததால் சிக்கிக் கொண்டதாக கூறினார். இதனையடுத்து அண்ணாமலையை கைது செய்த போலீசார் அவரை ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com