கமுதி அருகே கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக மோதல்; 11 பேர் காயம்

கமுதி அருகே கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 11 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கமுதி அருகே கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக மோதல்; 11 பேர் காயம்
Published on

கமுதி,

கமுதி அருகே பேரையூர் போலீஸ் சரகம் மருதங்கநல்லூர் கிராமத்தில் உள்ளது ஆனையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். இங்கு கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் தியாகராஜன் தலைமையில் 15 பேரும், அ.தி.மு.க. சார்பில் தற்போதைய கூட்டுறவு சங்க தலைவர் வன்னிமுத்து தலைமையில் 15 பேரும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் அரிவாள், கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் வன்னிமுத்து தரப்பை சேர்ந்த சரசுவதி, கதிர்வேலம்மாள், வன்னிமுத்து, தனிக்கொடி, செல்வம், செல்லையா உள்பட 8 பேரும், மற்றொரு தரப்பை சேர்ந்த தியாகராஜன், முரளி, முத்துக்குமார் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

உடனடியாக காயமடைந்த அனைவரும் ராமநாதபுரம், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தனுஷ்கோடி என்பவர் அளித்த புகாரின் பேரில் தியாகராஜன், ராமையா, முனீசுவரி, ராஜாமணி அம்மாள் உள்பட 12 பேர் மீதும், இதேபோல முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் வன்னிமுத்து, முத்துராமலிங்கம், அருள்பாண்டி, செங்கோட்டையன் உள்பட 13 பேர் மீதும் பேரையூர் போலீசார் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com