

பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால், அக்கட்சி வன்முறையில் ஈடுபட தொடங்கியுள்ளது. ஜனநாயகத்தில் அந்த கட்சி நம்பிக்கையை இழந்துவிட்டது. அதனால் வன்முறை அரசியலை காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. 5 ஆண்டுகளில் வளர்ச்சி பணிகளை செய்திருந்தால், சித்தராமையா எதற்காக இந்த விரோத அரசியலை செய்கிறார்?.
வளர்ச்சியின் அடிப்படையில் தேர்தலை சந்திக்க முடியாத காங்கிரஸ் கட்சியினர், தனிப்பட்ட முறையில் எங்கள் கட்சி தலைவர்களை தாக்கி பேசுகிறார்கள். அனைத்து ஊழல் வழக்குகளில் இருந்தும் எடியூரப்பாவை ஐகோர்ட்டு விடுவித்துவிட்டது. ஆயினும் எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சித்தராமையா கூறி வருகிறார்.
உடுப்பி கிருஷ்ணா மடத்திற்கு செல்ல பிரதமர் மோடி முடிவு செய்து இருந்தார். ஆனால் பிரதமரின் பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்காததால் அங்கு செல்ல முடியவில்லை. இதற்கு யாரும் வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். முன்னாள் பிரதமர்கள் மீது மோடி மிகுந்த மரியாதை வைத்துள்ளார். அதன் அடிப்படையில் தேவேகவுடாவை பற்றி பிரதமர் பேசினார்.
இதை வைத்து ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் பா.ஜனதா நெருங்குவதாக கூறுவது தவறு. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீதும் மோடி மரியாதை வைத்துள்ளார். எங்கள் கட்சி 224 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது. பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது இவ்வாறு ஷோபா கூறினார்.