நெல்லையில் புதிதாக 10 பேருக்கு கொரோனா: பாதித்தோர் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

நெல்லை மாவட்டத்தில் புதிதாக 6 பெண்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்து உள்ளது.
நெல்லையில் புதிதாக 10 பேருக்கு கொரோனா: பாதித்தோர் எண்ணிக்கை 90 ஆக உயர்வு
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் முதலில் கொரோனா வேகமாக பரவியது. கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி வரை 63 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அதன்பிறகு 12 நாட்களுக்கு புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இதனால் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர்.

தற்போது நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவத்தொடங்கி உள்ளது. நேற்று முந்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்திருந்தது.

இந்த நிலையில் நெல்லையில் மேலும் 10 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லை மேலப்பாளையத்தில் 2 வயது சிறுமி, 13 வயது இளம்பெண் உள்பட 6 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் கொரோனா பாதிப்பால் சமீபத்தில் இறந்த 83 வயது முதியவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆவார்கள்.

இதுதவிர நாங்குநேரி யூனியன் காடன்குளம் திருமலாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெற்கு கழுவூரை சேர்ந்த 37 வயது ஆணுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் மும்பை தாராவியில் வசித்து வந்தார். அங்கிருந்து தனது மனைவி மற்றும் மகனுடன் புறப்பட்டு, கடந்த 8-ந்தேதி தெற்கு கழுவூருக்கு வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் அய்யப்பன், கிராம நிர்வாக அலுவலர் ஜெபாஸ்டின் வேதக்கண் ஆகியோர் அந்த நபரை பரிசோதனைக்காக முனைஞ்சிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் அவரது மனைவி, மகன் உள்பட குடும்பத்தினர் 4 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் வீடு தனிமைப்படுத்தப்பட்டது. மேலும், 5 கிலோ மீட்டர் சுற்றளவில் யாரும் வெளியே செல்லவும், உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது. கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் குருநாதன், யூனியன் ஆணையாளர் பிரமநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், நாங்குநேரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜான் ஜெயச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், வடிவேல் முருகன் ஆகியோர் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். நாங்குநேரி தீயணைப்பு வாகனம் மூலம் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கொரோனாவால் நேற்று 10 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு முதியவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார். 62 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 27 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com