அரசு, தனியார் டாக்டர்கள் இணைந்து கொரோனா அவசர கால சிகிச்சை பிரிவு; புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தல்

அரசு, தனியார் டாக்டர்கள் இணைந்து கொரோனா அவசர கால சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும் சுகாதாரத்துறை செயலர் அருண் அறிவுறுத்தினார்.
அரசு, தனியார் டாக்டர்கள் இணைந்து கொரோனா அவசர கால சிகிச்சை பிரிவு; புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தல்
Published on

ஆக்சிஜன் தேவை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தலைவிரித்தாடுகிறது. கொரோனா சிகிச்சையில் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிப்பதால் அதன் தேவை அதிகரித்து வருவதே இதற்கு காரணம். டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் மரணத்தை தழுவும் அவலத்தையும் காண முடிகிறது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் ஆக்சிஜன் இருப்பு குறித்து ஆய்வுசெய்து உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை செயலர் அருண் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரியின் மயக்க மருந்து மருத்துவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மயக்க மருந்து மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மருத்துவ கல்லூரிகளில் உள்ள வெண்டிலேட்டர், ஆக்சிஜன் இருப்பு விவரம் மற்றும் அதன் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தின் ஆக்சிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை சமாளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போது சுகாதாரத்துறை செயலர் அருண் பேசுகையில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தனியார் மருத்துவமனையின் பங்களிப்பு இருக்க வேண்டும். தேவைப்பட்டால் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி டாக்டர்கள், அரசு இந்திரா காந்தி மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை டாக்டர்களுடன் இணைந்து கொரோனா அவசர கால சிகிச்சை பிரிவை உருவாக்கி செயல்பட வேண்டும்.

தற்போது தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள சுவாச கருவிகள் எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் தனியாக 20 சுவாச கருவிகளை ஒதுக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com