கடலூர் மாவட்டத்தில் சிறை வார்டன் உள்பட 27 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் சிறை வார்டன் உள்பட 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
கடலூர் மாவட்டத்தில் சிறை வார்டன் உள்பட 27 பேருக்கு கொரோனா
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 976 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 572 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் நேற்று சிலரது பரிசோதனை முடிவு வந்தது. இதில் சிறை வார்டன் உள்பட 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

வடலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் ஒருவரும், செவிலியரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதன் பரிசோதனை முடிவில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சோதனை சாவடியில் முகாம்

டாக்டருக்கும், செவிலியருக்கும் கொரோனா தொற்று எப்படி பரவியது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த டாக்டரும், செவிலியரும் கடந்த சில நாட்களாக கண்டரக்கோட்டை சோதனை சாவடியில் மருத்துவ குழுவினருடன் முகாமிட்டு, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கடலூருக்கு வந்த பொதுமக்களை கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அவ்வாறு பரிசோதனையில் ஈடுபட்ட போது, கொரோனா நோயாளி யாருக்காவது பரிசோதனை செய்ததன் மூலம் அவர்களுக்கும் தொற்று பரவி இருக்கலாம் என தெரியவந்தது. இவர்கள் 2 பேரும், நேற்று முன்தினம் வெளியான கொரோனா எண்ணிக்கை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கணக்கெடுக்கும் பணி

இதேபோல் ராமநத்தம் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் 50 வயது நபர். மளிகை கடை வைத்துள்ள இவர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாளையத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது மளிகை கடைக்கு யார்? யார் வந்து சென்றார்கள் என்ற விவரம் குறித்து சுகாதாரத்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.

ஆயிரத்தை தாண்டியது

இதுதவிர தெலுங்கானாவில் இருந்து நெய்வேலி என்.எல்.சி. குடியிருப்பு பகுதிக்கு வந்த 3 பேர், கர்நாடகாவில் இருந்து நல்லூர், மங்களூர் பகுதிக்கு வந்த 7 பேர், கேரளாவில் இருந்து கடலூர் வந்த ஒருவர், மதுரை, விருதுநகர், சென்னை ஆகிய பகுதியில் இருந்து சிதம்பரம் பகுதிக்கு வந்த 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. மேலும் சளி, காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் 2 பேருக்கும், கொரோனாவால் இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதேபோல் கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த கடலூர் மஞ்சக்குப்பம் கிளை சிறையின் வார்டன்கள் 2 பேர், சமையலர் ஒருவர் என 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. அதாவது இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 1,899 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com