கொரோனா வைரஸ் எதிரொலி: வெளிநாட்டில் இருந்து வந்த 52 பேர் தீவிர கண்காணிப்பு - கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைப்பு

கொரோனா வைரஸ் எதிரொலியால் வெளிநாட்டில் இருந்து கடலூருக்கு வந்த 52 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் எதிரொலி: வெளிநாட்டில் இருந்து வந்த 52 பேர் தீவிர கண்காணிப்பு - கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைப்பு
Published on

கடலூர்,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் கேரள மாநிலத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று, குணம் அடைந்து வீடு திரும்பினர்.

இந்த நிலையில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சீனா, ஈரான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வெளிநாட்டில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதா கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் இருந்து சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு படிக்க மற்றும் வேலை பார்ப்பதற்காக சென்ற 52 பேர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த 52 பேருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து வந்த 52 பேரையும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்றார்.

கடலூர் மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. வெளிநாட்டில் இருந்து கடலூருக்கு திரும்பியவர்களும் கொரோனா வைரஸ் பாதிப்பின்றி, நலமுடன் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்பட 11 அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தனி வார்டுகளில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com