கொரோனா வைரஸ் எதிரொலி: ஊட்டியில் திரையரங்குகள் மூடல்; சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின

கொரோனா வைரஸ் எதிரொலியால் ஊட்டியில் திரையரங்குகள் மூடப்பட்டன. மேலும் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கொரோனா வைரஸ் எதிரொலி: ஊட்டியில் திரையரங்குகள் மூடல்; சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
Published on

ஊட்டி,

கொரோனா வைரஸ் உலக நாடுகளில் வேகமாக பரவி வருவதுடன், இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. இதனால் தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதையடுத்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரியில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் வருகிற 31-ந் தேதி வரை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கேரளா, கர்நாடகா மாநில எல்லைகளை ஒட்டி நீலகிரி மாவட்டம் அமைந்து உள்ளதாலும், அம்மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் இருப்பதாலும் அண்டை மாநிலங்களுக்கு சென்று வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தற்போது வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால், அந்த வழிபாட்டு தலங்களின் நிர்வாகத்தினர் தூய்மை படுத்தும் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்களுக்கு வருகை புரிபவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை மக்கள் கூடும் இடங்களுக்கு வருகை தருவதை தடுக்கவும் தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அங்கு மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பகுதிகளை தூய்மையாக வைத்திடவும், பொதுவான நீர்த் தொட்டிகளை சுகாதாரமான முறையில், அவ்வப்போது சுத்தம் செய்தும் வைக்க வேண்டும்.

கூட்டம் நிறைந்த பொது இடங்களில் வயதானவர்கள், நோய்வாய்ப் பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் செல்வதை தவிர்க்கவும். நீலகிரி மாவட்ட மக்கள் மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மாவட்டத்தை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் பழமை வாய்ந்த அசெம்பிளி திரையரங்கு உள்ளது. இந்த தியேட்டர் கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக முன்னெச்சரிச்கை நடவடிக்கையாக மூடப்பட்டு உள்ளது. இதேபோன்று மற்றொரு திரையரங்கும் மூடப்பட்டு இருக்கிறது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தனியார் மூலம் அமைக்கப்பட்ட 3டி, 5டி-யில் திரையிடப்படுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பீதியால் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை ஊட்டியில் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. அதனால் முக்கிய சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி இருப்பதை காண முடிகிறது. சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் குறைந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com